IND vs AUS : முதல் டி20 நடைபெறும் மொஹாலி மைதானம் எப்படி, வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

Mohali Cricket Ground Stadium
Advertisement

விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் தயாராகி வரும் இந்தியா கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய நிலையில் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவுக்கு உள்ளானது. இருப்பினும் அந்த தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுள்ள இந்தியா அடுத்ததாக சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது.

INDvsAUS

சமீபத்திய ஆசிய கோப்பையில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ள இந்த தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல இந்தியா போராட உள்ளது. மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்னோட்டமாக இந்த தொடரில் வென்று தன்னுடைய குறைகளை சரி செய்து கொள்ள இந்தியா தயாராகியுள்ளது.

- Advertisement -

மறுபுறம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக கோப்பையை தக்க வைக்க களமிறங்கும் ஆஸ்திரேலியா அதற்கு முன்பாக உலகின் நம்பர் ஒன் டி20அணியாக இருக்கும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தங்களது பலத்தை சோதித்து பார்க்க இத்தொடரில் களமிறங்குகிறது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 20ஆம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மொகாலியில் நடைபெறுகிறது.

Ind vs Aus

மொஹாலி மைதானம்:
ஐஎஸ் பிந்த்ரா என்றழைக்கப்படும் பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரியத்தின் இம்மைதானம் கடந்த 1993இல் உருவாக்கப்பட்டது. 2011 உலகக்கோப்பை அரையிறுதி உட்பட ஏராளமான சரித்திர போட்டிகளை நடத்திய பெருமை கொண்ட இம்மைதானத்தில் 2009 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 27000 ரசிகர்கள் நேரடியாக அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை 5 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

- Advertisement -

1. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 2 போட்டிகளிலும் சேஸிங் செய்த அணிகள் 3 போட்டிகளிலும் வென்றுள்ளன. வரலாற்றில் இந்த மைதானத்தில் 3 போட்டிகளில் களமிறங்கியுள்ள இந்தியா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

2. அந்த வகையில் ராசியான மைதானமாக விளங்கும் மொகாலியில் ஆஸ்திரேலியாவை கடந்த 2016இல் முதல் முறையாக எதிர்கொண்ட இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டி20 உலக கோப்பையில் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 161 ரன்களை சேசிங் செய்யும் போது விராட் கோலி 82* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

- Advertisement -

புள்ளிவிவரங்கள்:
1. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த டாப் 3 பேட்ஸ்மேன்களின் பட்டியல்:
1. விராட் கோலி : 154
2. யுவராஜ் சிங் : 81
3. மார்ட்டின் கப்டில் : 80

Virat Kohli 122

2. இம்மைதானத்தில் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் சதமடித்ததில்லை என்ற நிலையில் அதிகபட்சமாக விராட் கோலி 2 அரை சதங்கள் அடித்துள்ளார். அதே போல இங்கு விராட் கோலி அதிகபட்ச ஸ்கோராக 82* ரன்களை பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

3. இம்மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 3 பந்துவீச்சாளர்கள்:
1. ஜேம்ஸ் பல்க்னர் : 6
2. யுவராஜ் சிங் : 4
3. ஹர்டிக் பாண்டியா : 3

indvsaus

4. இம்மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் ஜேம்ஸ் பல்க்னர் : 5/27. இங்கு இந்திய பவுலர்கள் 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை என்ற நிலைமையில் யுவராஜ் சிங் சிறந்த பந்து வீச்சை (3/23) பதிவு செய்துள்ளார். மேலும் இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி : இந்தியா – 211/4

வெதர் ரிப்போர்ட்: இப்போட்டி நடைபெறும் மொகாலி நகரில் போட்டி நாளன்று  காலையில் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும் போட்டி நடைபெறும் இரவு நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் மழைக்கான வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது. எனவே இப்போட்டி மழையின் குறுக்கீடின்றி முழுமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

பிட்ச் ரிப்போர்ட்: இப்போட்டி நடைபெறும் மொகாலி மைதானத்தில் இருக்கும் பிட்ச் வரலாற்றில் பேட்டிங் சாதகமாகவே இருந்து வருகிறது. அதற்கு சான்றாக இங்கு இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 178 ஆகும். எனவே இங்கு ஆரம்பகட்ட சூழ்நிலைகளை சமாளித்து திறமையை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்கள் எளிதாக நல்ல ரன்களை எடுக்கலாம்.

அதே சமயம் புதிய பந்தை பயன்படுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களும் மிடில் ஓவர்களில் சுழல் பந்து வீச்சாளர்களும் கணிசமான விக்கெட்டுகளை எடுப்பார்கள். இப்போட்டி இரவு நேரத்தில் நடைபெறுவதால் பனியின் தாக்கமும் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் வரலாற்றில் இங்கு சேசிங் செய்த அணிகள் 3 போட்டிகளில் வென்றுள்ளதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றி வித்திடலாம்.

Advertisement