கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. அந்த போட்டி முடிந்தவுடன் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரர்கள் விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஒன்றாக ஓய்வினை அறிவித்திருந்தார்கள். இதன் காரணமாக இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
2026 டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணி ஓர் அலசல் :
கடந்த ஒரு ஆண்டாகவே அவரது தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்தாலும் இந்திய அணியானது அடுத்த டி20 தொடர்களை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. இதனால் நடப்பு சாம்பியனாக எதிர்வரும் 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இவ்வேளையில் இந்த தொடருக்கான இந்திய அணி நாளை டிசம்பர் 20-ஆம் தேதி பிசிசிஐ மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறப்போகும் அந்த 15 வீரர்கள் யார்? என்பது குறித்த ஒரு அலசலை இங்கு காணலாம். அந்த வகையில் துவக்க வீரர்களாக நிச்சயம் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இடம் பெறுவது உறுதி.
அதோடு அவர்களுக்கு அடுத்து டாப் ஆர்டரில் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் இடம் பிடிப்பார்கள். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகியோரும் இடம் பெறுவார்கள். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடிப்பார்கள்.
முழுநேர சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இடம் கிடைக்கும். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பிடிப்பார்கள். இவர்களை தவிர பேக்கப் வீரர்களாக ஒரு சில வீரர்கள் தேர்வு செய்யப்படலாம் என்றும் தெரிகிறது. அந்த வகையில் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியின் முழு வீரர்களின் பட்டியல் இதோ :
இதையும் படிங்க : கடுமையான வயிற்று வலியால் கணிசமான உடல் எடை குறைந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – மருத்துவர்கள் குடுத்த அட்வைஸ்
1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) ஜிதேஷ் சர்மா, 9) அக்சர் பட்டேல், 10) வாஷிங்டன் சுந்தர், 11) குல்தீப் யாதவ், 12) வருண் சக்கரவர்த்தி, 13) ஜஸ்ப்ரீத் பும்ரா, 14) அர்ஷ்தீப் சிங், 15) ஹர்ஷித் ராணா.



