இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வரை தோல்வியையே சந்திக்காமல் சென்ற இந்திய அணியானது அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. அந்த தோல்வி இந்திய அணி வீரர்களின் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்களையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது.
சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடாது :
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது. எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது மார்ச் 9-ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கும் வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களது அதிகாரப்பூர்வ அணியை அறிவித்து விட்டன.
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இருக்கும் அணிகள் அனைத்தும் முன்கூட்டியே தாங்கள் விளையாட இருக்கும் மைதானத்திற்கு சென்று பயிற்சி எடுக்க இருக்கின்றன. ஆனால் இந்திய அணி மட்டும் எந்தவித பயிற்சியும் இன்றி துபாயில் நடைபெறும் வங்கதே அணிக்கெதிரான போட்டியில் நேரடியாக விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி இந்திய அணியானது நாளை பிப்ரவரி 14-ஆம் தேதி துபாய் பயணிக்க உள்ளது. எனவே பிப்ரவரி 15ஆம் தேதி அன்றுதான் இந்திய அணி துபாய் சென்றடையும். அதனால் இந்த இடைப்பட்ட நாட்களில் பயிற்சி போட்டியை ஏற்பாடு செய்வது கடினம்.
அதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளதால் அவர்களது பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வளிக்கும் விதமாக பி.சி.சி.ஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக ஐந்து நாட்கள் ஓய்வுக்கு பின்னர் பிப்ரவரி 20-ஆம் தேதி வங்கதேச அணிக்கெதிராக நடைபெறவுள்ள முதல் போட்டியில் இந்திய அணி நேரடியாக பங்கேற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலை தூக்கிட்டு வருண் சக்ரவர்த்தியை சேர்க்க இதுவே காரணம் – கவுதம் கம்பீர் அளித்த பதில்
பின்னர் பிப்ரவரி 23-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியிலும், மார்ச் 2-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி விளையாட உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரினை பொருத்தமட்டில் இந்திய அணி மொத்தமாக 5 போட்டிகளில் விளையாட முடியும். அந்த ஐந்து போட்டிகளுமே துபாய் மைதானத்தில் தான் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



