டி20 உலகக்கோப்பை : இந்திய அணிக்கு சிக்கலாக மாறியுள்ள 4 பிரச்சனைகள் – விவரம் ஈதோ

IND

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடர் முடிவடைந்த பிறகு டி20 உலகக்கோப்பை தொடரானது அங்கு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியும் இம்மாதத் துவக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சில முக்கிய வீரர்கள் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்திய அணிக்கு அது சற்று வருத்தமான விடயமாக மாறியுள்ளது. அதன்படி தற்போது உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி எதிர்கொண்டுள்ள 4 பிரச்சினைகளை இந்த பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

pandya 1

1) ஹார்டிக் பாண்டியா பந்து வீசாதது : உலகக்கோப்பை அணியில் மிகமுக்கியமான இடம் பெற்ற ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனது அபாரமான பேட்டிங்கால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தாலும் பந்துவீச்சிலும் அதே அளவு சிறப்பாக செயல்படக் கூடியவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்து வீசாமல் இருந்து வருகிறார். இலங்கை அணிக்கு எதிராக தொடரில் ஒரு சில ஓவர்கள் வீசி இருந்தாலும் தற்போது ஐபிஎல் தொடரில் அவர் பந்து வீசும் அளவிற்கு முழு உடல் தகுதியுடன் இல்லை என்பதால் பந்து வீசாமல் இருந்து வருகிறார். இதன் காரணமாக நிச்சயம் அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது கடினம்.

- Advertisement -

chahar

2) ராகுல் சாகர் பார்ம் : இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த யுஸ்வேந்திர சாஹல் இந்த உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராகுல் சாகர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அவரது பந்து வீச்சு மோசமாக உள்ளதால் கடந்த இரு போட்டிகள் ஆகவே அவர் மும்பை அணிக்காக விளையாடாமல் இருந்து வருகிறார். அதேவேளையில் அணியிலிருந்து நீக்கப்பட்ட சாஹல் தற்போது பெங்களூர் அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3) சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் பேட்டிங் பார்ம் : இந்திய அணியின் முக்கிய நம்பிக்கை வீரர்களாக தற்போது இந்த இரு வீரர்களும் மாறி உள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிரம்மாண்டமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருந்தனர். ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இவர்கள் இருவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுவும் இந்திய அணிக்கு ஒரு பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.

Bhuvi

4) புவனேஸ்வர் குமார் தற்போதைய பார்ம் : இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாகவே புவனேஸ்வர் குமார் விளையாடி வந்தாலும் தற்போது அவருடைய பார்ம் சற்று மந்தமாகவே உள்ளது என்று கூறலாம். தொடர்ச்சியாக தனது பந்துவீச்சில் அசத்தி வந்த புவனேஸ்வர் குமார் சமீபகாலமாகவே முழு திறனுடன் பந்துவீச வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வரும் வேளையில் புவனேஸ்வர் குமாரின் தற்போதைய பார்ம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேவேளையில் ரிசர்வ் வீரராக இடம்பெற்றுள்ள தீபக் சாஹர் இந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement