இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பல்லக்ல்லே நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடைசி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 முக்கிய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியை கழுத்து வலி காரணமாக தவறவிட்ட இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் மீண்டும் துவக்க வீரராக அணிக்குள் வருவதால் சஞ்சு சாம்சன் வெளியேறுவார்.
அதே போன்று இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இடம் பெற்று விளையாடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் ஆகியோருக்கு இன்றைய மூன்றாவது போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அவர்களுக்கு பதிலாக இந்த தொடரில் இதுவரை வாய்ப்பை பெறாத தமிழக ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு அக்ஸர் பட்டேலின் இடத்திலும், இடதுகை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுவிற்கு அர்ஷ்தீப் சிங்கின் இடத்திலும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் இந்த மூன்று முக்கியமான மாற்றங்கள் நிகழ இருக்கின்றன.
இதையும் படிங்க : இந்த 2 விஷயம் மிஸ்ஸிங்.. இந்தியாவிடம் ஸ்கூல் பசங்க மாதிரி விளையாடி இலங்கை தோத்துட்டாங்க.. கம்ரான் அக்மல்
அதேபோன்று இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஷிவம் துபேவிற்கு முதல் இரண்டு போட்டியில் மட்டுமல்லாமல் மூன்றாவது போட்டியிலும் வாய்ப்பு கிடைப்பது கடினம் தான் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ஹார்டிக் பாண்டியா பணிச்சுமை காரணமாக தானாக முன்வந்து ஓய்வு எடுத்துக் கொண்டால் அவருக்கு பதிலாக ஷிவம் துபே பிளேயிங் லெவனில் வர வாய்ப்புள்ளது. அதுதவிர மற்றபடி அவருக்கு இன்றைய போட்டியில் இடம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.



