இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலைப் வகிக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் படு மோசமான தோல்வியை சந்தித்தது.

இதன் காரணமாக தற்போது அடுத்து நடைபெற இருக்கும் 4-வது போட்டியில் இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் வேண்டும் என இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் இந்திய அணியில் தற்போது உள்ள சீனியர் பேட்ஸ்மென்கள் இந்த தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
குறிப்பாக ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் அவர்கள் இருவரையும் தாண்டி ஒரு வீரரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரையும் தற்போது இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வீரர் வேறுயாருமில்லை இந்த இங்கிலாந்து தொடரில் மேட்ச் வின்னர் ஆக இருப்பார் என்று பலராலும் கூறப்பட்ட விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான்.

ஆஸ்திரேலிய தொடரின் போது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் நிச்சயம் இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்கு பெரிதளவு கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 5 இன்னிங்சில் சேர்த்து அவர் இன்னும் மொத்தம் 87 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அந்த அளவிற்கு மோசமான நிலையில் அவரது பேட்டிங் பார்ம் உள்ளது.
இதன் காரணமாக புஜாரா மற்றும் ரஹானேவோடு சேர்த்து பண்ட்டையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவரை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.



