பலத்த பாதுகாப்பையும் மீறி கோலியை சந்திக்க மைதானத்திற்குள் ஓடிய ரசிகர்

fan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருக்கும். ஆனால் அந்த அத்தனை கணக்குகளுக்கும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

- Advertisement -

இதனால் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை குவித்துள்ளது. துவக்கவீரர் ரோஹித் சர்மா 57 ரன்களையும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் விராத் கோலி பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கினார். அதேவேளையில் மைதானத்தில் உள்ள அனைத்து தடுப்புகளையும் மீறி கோலியை பார்ப்பதற்காக ஒரு ரசிகர் மைதானத்திற்குள் புகுந்தார். கொரோனா விதிமுறையை மீறக் கூடாது என்பதற்காக பயோ பபுலில் இருக்கும் வீரர்கள் ரசிகர்களையோ, மற்ற நபர்களையோ சந்திப்பது, உரையாடுவது என்ற சில விடயங்களைத் தவிர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர் ஓடி வருவதை பார்த்த கேப்டன் கோலி பயோ பபுள் விதிமுறையை மீறக் கூடாது என்பதற்காக அவரைப் பார்த்து சற்று அடி தூரம் பின்னால் வந்து அவர் போகும் வரை சந்திக்காமல் இருந்தார். மேலும் ஓடி வந்த ரசிகர் விராத் கோலியை நேரில் கண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டு பின்னர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின்னரே ஆட்டம் தொடர்ந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement