இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய தனது முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாலோ ஆன் கொடுக்க மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் துவங்கிய இன்று வீசப்பட்ட இரண்டாவது ஓவரிலேயே தென் ஆப்பிரிக்கா அணி ஆல் அவுட் ஆகி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. நதிம் சிறப்பாக பந்துவீசி இன்று காலை 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியோடு சேர்த்து தொடர்ந்து இரு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது 84 வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1935 – 36 ஆம் ஆண்டு ஆகியுள்ளது. அதன் பிறகு தற்போது இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியை மிக மோசமாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.