97க்கு ஆல் அவுட்.. 150 ரன்ஸ்.. இங்கிலாந்தை தூளாக்கிய இந்தியா.. 2012ஐ முந்தி மாபெரும் சாதனை வெற்றி

IND vs ENG 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடியது. அந்தத் தொடரின் கடைசி போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி மும்பையில் இருக்கும் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் 16 ரன்களில் அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி இங்கிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கி 17 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார். எதிர்புறம் திலக் வர்மா 24, கேப்டன் சூரியகுமார் யாதவ் 2, சிவம் துபே 30, ஹர்டிக் பாண்டியா 9, ரிங்கு சிங் 9 ரன்களில் அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து எதிர்ப்புறம் அடித்து நொறுக்கிய அபிஷேக் 37 பந்துகளில் 100 ரன்கள் தொட்டார்.

- Advertisement -

அபிஷேக் மிரட்டல்:

தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் 7 பவுண்டரி 13 சிக்சர்களுடன் 135 (54) ரன்கள் விளாசினார். அவருடைய அதிரடியால் 20 ஓவரில் இந்தியா 247-9 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்துக்கு பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

ஆனால் எதிர்ப்புறம் பென் டக்கெட் 0, கேப்டன் ஜோஸ் பட்லர் 7, ஹரி ப்ரூக் 2, லியம் லிவிங்ஸ்டன் 9, ஜேக்கப் பேத்தல் 10 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதேபோல மறுபுறம் போராடிய சால்ட் அரை சதத்தை அடித்து 55 ரன்கள் குவித்து துபே வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் அடுத்து வந்த வீரர்களையும் வந்தவாக்கிலேயே பெவிலியன் அனுப்பிய இந்தியா 10.3 ஓவரில் இங்கிலாந்தை 97 ரன்களுக்கு சுருட்டி வீசியது.

- Advertisement -

சாதனை வெற்றி:

அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியாவுக்கு ஷமி 3, வருண் சக்கரவர்த்தி 2, அபிஷேக் சர்மா 2, சிவம் துபே 2 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்கள். அதனால் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தத் தொடரை வென்று சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மேலும் இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: 37 பந்தில் 100.. 249 ரன்ஸ்.. அடித்து நொறுக்கிய அபிஷேக் 2வது உலக சாதனை.. இங்கிலாந்தை பொளந்த இந்தியா

இதற்கு முன் கடந்த 2012 டி20 உலகக் கோப்பையில் கொழும்புவில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனை. மேலும் டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய இரண்டாவது பெரிய வெற்றியையும் பதிவு செய்து இந்தியா சாதனை படைத்தது. அந்த வகையில் சூரியகுமார் தலைமையில் புதிய இந்திய அணி தங்களை நடப்புச் சாம்பியன் என்பதை நிரூபிக்கும் வகையில் அசத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement