இந்தியா ஏ கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 16ஆம் தேதி லக்னோவில் இருக்கும் அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 532/6 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் சாம் கோன்ஸ்டஸ் சதத்தை அடித்து 109 ரன்கள் குவித்தார். அதே போல மற்றொரு துவக்க வீரர் கேம்பல் 88 ரன்கள் எடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் கூப்பர் கோன்லி 70, லியாம் ஸ்காட் 81 ரன்களை குவி.த்து அசத்தினர்.
அடித்த ஆஸ்திரேலியா:
அதை விட லோயர் ஆர்டரில் டி20 போல அதிரடியாக பேட்டிங் செய்த பிலிப் 18 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதத்தை அடித்து 123* (87), சேவியர் பார்லெட் 39* (24) ரன்கள் எடுத்தனர். மறுபுறம் இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷ் துபே 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய இந்தியா ஏ அணிக்கு 88 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அபிமன்யு ஈஸ்வரன் 44 ரன்னில் அவுட்டானார்.
அவருடன் மறுபுறம் சேர்ந்து விளையாடிய தமிழக வீரர் ஜெகதீசன் அரை சதத்தை அடித்து 64 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அவருடன் இந்தப் பக்கம் இணைந்து விளையாடிய சாய் சுதர்சன் தமது பங்கிற்கு நங்கூரமாக விளையாடி 73 ரன்கள் குவித்து அசத்தினார். மிடில் ஆடரில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
திருப்பி அடித்த இந்தியா:
இருப்பினும் தேவதூத் படிக்கல் – துருவ் ஜுரேல் ஜோடி சேர்ந்து நங்கூரத்தை போட்டனர். 5வது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய பவுலர்களைப் பந்தாடிய அந்த ஜோடி 228 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை அடித்தது. அதில் ஜுரேல் 13 பவுண்டரி 4 சிக்ஸருடன் 140 ரன்களும் படிக்கல் 14 பவுண்டரி 1 சிக்ஸருடன் 150 ரன்களும் விளாசி அவுட்டானார்கள். அடுத்து வந்த தானுஷ் கோட்டியான் 16, ஹர்ஷ் துபே 16* ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா ஏ அணி 531/7 ரன்களை குவித்த போது மழை வந்தது.
இதையும் படிங்க: கடவுளே வரவர நானும் ரோஹித் மாதிரி மாறிக்கிட்டு வரேனே.. டாஸில் கலகலத்த சூர்யகுமாரை கலாய்த்த சாஸ்திரி
அத்துடன் தங்களுடைய ஆட்டத்தை இந்தியா டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அதனால் ஆஸ்திரேலியா ஏ அணியை (532) இந்தியா (531) கிட்டத்தட்ட சமமாக திருப்பி அடித்தனர் என்றே சொல்லலாம். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ரோச்சுலி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக வெறும் 1 ரன் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலியா 56/0 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடிந்தது. 150 ரன்கள் விளாசிய இந்தியாவின் படிக்கல் ஆட்டநாயனாக அறிவிக்கப்பட்டார்.



