
இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியின் பேட்டிங்கில் ஒரு ரன் மெஷினாக ஏராளமான ரன்களை குவித்து பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார். உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அற்புதமாக எதிர்கொண்டு அசால்டாக ரன்களைச் சேர்த்த அவரை ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று வல்லுனர்களும் ஜாம்பவான்களும் போற்றுகின்றனர். தனது 31 வயதிலேயே 70 சதங்களை அடித்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 3-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்து சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகிய ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்தார்.
அதனால் ஒரு கட்டத்தில் சச்சினின் 100 சதங்கள் சாதனையை எளிதாக முறியடித்து விடுவார் என்று கருதப்பட்ட அவர் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகிறார். ஆம் 2019இல் கடைசியாக சதமடித்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 100 போட்டிகளுக்கும் மேலாக கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
தினம்தோறும் விமர்சனம்:
இந்தியாவையும் ஐபிஎல் தொடரில் பெங்களூருவையும் வழிநடத்திய வந்த அவர் கேப்டன்சிப் பொறுப்பு தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி கடந்த ஜனவரி முதல் சாதாரண பேட்ஸ்மேனாக சுதந்திர பறவையாக விளையாட துவங்கினார். அதனால் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் இருமடங்கு பார்மை இழந்து முன்பை விட மோசமாக பேட்டிங் செய்தார். குறிப்பாக சமீபத்திய 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 முறை கோல்டன் டக் அவுட்டான பரிதாபத்திற்கு உள்ளானார்.
கடந்த பல வருடங்களாக ஓடிஓடி ரன்கள் சேர்த்த களைப்பு அவரின் உடலிலும் ஆட்டத்திலும் தென்பட்டதால் 2 – 3 மாதங்கள் பிரேக் எடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்பும் முடிவை எடுக்குமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் களத்தில் விளையாடினால் தானே ஃபார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்த அவர் ஐபிஎல் தொடரை முழுதாக விளையாடிய போதிலும் எந்த மாற்றமும் முன்னேற்றத்தையும் காணவில்லை. நவீன கிரிக்கெட்டில் ஒரு சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக கருதப்படும் அவர் எப்போது சதமடிப்பார் என்ற தலைப்பில் உலகம் முழுவதிலும் முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களும் தினம்தோறும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
பேட்டால் பதில்:
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் வீரர் என்பதற்காக நீங்கள் சிறப்பாக செயல்படவில்லையெனில் யாரும் விமர்சிக்காமல் இருக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கும் இந்திய ஜாம்பவான் கபில் தேவ் அந்த விமர்சனங்களை சதமடித்து உங்களின் பேட்டால் பதில் சொல்லி நிறுத்துமாறு விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது பற்றி சமீபத்தில் ஒரு யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி அளவுக்கு நான் அதிகப்படியான கிரிக்கெட் விளையாடியதில்லை. ஆனால் சில சமயங்களில் நீங்கள் சிறப்பாக விளையாடவில்லையெனில் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். நாங்கள் கிரிக்கெட் விளையாடி விட்டோம், நாங்கள் விளையாட்டை புரிந்துகொள்கிறோம். அதன் பிறகு அவர்கள் தங்கள் சிந்தனை செயல்முறையை மேம்படுத்த வேண்டும் என்பது நம்முடையதல்ல”
“நீங்கள் (விராட்) எங்களை தவறு என்று நிரூபித்தால் நாங்கள் அதை விரும்புவோம். நீங்கள் ரன்கள் எடுக்கவில்லை என்றால் ஏதோ தவறு இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். நாங்கள் உங்களின் செயல்பாடுகளை பார்க்கிறோம். ஆனால் நீங்கள் சிறப்பாக செயல்படவில்லையெனில் அதற்காக மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அதற்காக உங்களின் பேட் மற்றும் உங்களது செயல்பாடுகள்தான் பேச வேண்டும், மற்ற எதுவும் பேசக்கூடாது” என்று கூறினார். அதாவது சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சிறப்பாக செயல்படவில்லையெனில் ரசிகர்கள் உட்பட அனைவரும் விமர்சிக்க தான் செய்வார்கள் என்று கூறும் கபில் தேவ் அதற்கு பதிலடியாக ரன்களை குவித்து சதமடித்து அந்த விமர்சனங்களை தவறு என்று நிரூபித்தால் ரசிகர்களான நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் விராட் கோலியை போன்ற ஒரு நல்ல தரமான வீரர் இத்தனை வருடங்கள் சதமடிக்க முடியாமல் தவிப்பதை பார்ப்பது வேதனையாக உள்ளது என்று தெரிவித்துள்ள கபில்தேவ் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “அவரை போன்ற ஒரு பெரிய வீரர் இவ்வளவு இடைவெளியில் தடுமாறுவது எனக்கு வலிக்கிறது. அவர் எங்களுடைய ஹீரோ ஆவார். சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிடும் வகையில் அவரை போன்ற வீரர் கிடைப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அவர் வந்து எங்களை அப்படி ஒப்பிடும் அளவுக்கு சிந்திக்க வைத்தபின் இப்போது கடந்த சில வருடங்களாக தடுமாறுவது எனக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் கவலையை கொடுத்துள்ளது” என்று கூறினார்.