இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் இலட்சியத்துடன் தயாராகி வருகிறது. அதற்காக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை வென்றுள்ள இந்தியா சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதைக் காண்பித்துள்ளது.
அவை அனைத்தையும் விட கேப்டன் ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீபத்திய போட்டிகளில் சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். இருப்பினும் தமக்கு பிடித்த ஒருநாள் கிரிக்கெட்டில் ஒருவழியாக சதத்தை அடித்துள்ள அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
அசாருதீன் வாழ்த்து:
குறிப்பாக கட்டாக் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 119 (90) ரன்கள் அடித்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் குவித்த இந்திய துவக்க வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்தார். மேலும் கிறிஸ் கெயிலை முந்திய ரோஹித் ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்நிலையில் துபாயில் இதே போல ரோஹித்துக்கு பேட்டிங் கிளிக்கானால் சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்லும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் 37 வயதாகும் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவது அவருடைய முடிவே தவிர யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அசாருதீன் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மாவுக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மா கிளிக் ஆகும் பட்சத்தில் நாம் கோப்பையை வெல்வோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை”
ரோஹித் சாதிப்பாரா:
“சரியான நேரத்தில் அவருடைய ஃபார்ம் வந்துள்ளது. க்ளாஸ் பிளேயரான அவர் ரன்கள் அடிப்பதை நேற்று தொடர்ந்தார். அவர் நேற்று நன்றாக விளையாடி சாதனைகளை முறியடித்ததாக கேள்விப்பட்டேன். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததற்காக அவரை வாழ்த்துகிறேன். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன்”
இதையும் படிங்க: பஸ்பால் இங்கிலாந்து நினச்சதை ரோஹித் செஞ்சு காமிச்சுட்டாரு.. இதான் கரெக்ட்டான ரூட்.. பட்லர் ஆதங்கம்
“ஓய்வு என்பது ரோகித் சர்மா தீர்மானிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் வீரருக்குத் தான் தன்னுடைய ஆட்டம் மற்றும் எந்தளவுக்கு ஆர்வம் இருக்கிறது என்று தெரியும்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி புதன்கிழமை நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது



