அஷ்வின் ட்ராப் செய்யப்பட்டால் விராட் கோலியையும் ட்ராப் பண்ணலாமே – இந்திய ஜாம்பவான் நெத்தியடி கருத்து

Ashwin
- Advertisement -

இந்தியாவை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கடந்த 2008இல் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முக்கிய முதுகெலும்பு பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். ஜாம்பவான் சச்சினுக்கு பின் அவரைப் போலவே கடந்த பல வருடங்களாக தனது அபார பேட்டிங் திறமையால் ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் அடித்து நிறைய சரித்திர வெற்றிகளைப் பரிசளித்த அவர் ஏற்கனவே தன்னை உலகத்தரம் வாய்ந்த வீரர் என்று நிரூபித்துள்ளார். இருப்பினும் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்திருந்த அவர் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.

Kohli-1

- Advertisement -

இத்தனைக்கும் கேப்டன்ஷிப் அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் அதிலிருந்து விலகி கடந்த ஜனவரியில் இருந்து சுதந்திரப் பறவையாக விளையாடி வரும் நிலையில் எந்த மாற்றத்தையும் காணாமல் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட முன்பை விட மோசமாக பேட்டிங் செய்கிறார். அதனால் 2 – 3 மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு முன்னாள் வீரர்கள் கொடுத்த ஆலோசனையையும் பின்பற்றாத அவர் தொடர்ச்சியாக விளையாடும் நிலையில் சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியா வரலாற்று தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்தார்.

அழுத்தத்தில் விராட்:
இருப்பினும் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த விராட் கோலி என்ற பெயருக்காக இதுநாள் வரை அவரை ஃபார்மை காரணம் காட்டி இந்திய அணி நிர்வாகம் நீக்காமல் இருந்து வருகிறது. ஆனால் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் அவர் அதில் சிறப்பாக செயல்பட்டு ரன்களை அடித்தால் தான் இனிமேல் வாய்ப்பளிக்கப்படும் என்ற நிலைமைக்கு பிசிசிஐ வந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Ashwin

இந்நிலையில் சமீபத்திய பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் 2 பந்துவீச்சாளராக இருந்தபோதிலும் தமிழகத்தைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். ஆனால் சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கும் அஸ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் நீண்ட காலமாக சுமாராக செயல்பட்டு வரும் விராட் கோலியை ஏன் இந்திய அணி நிர்வாகம் நீக்கக்கூடாது என ஜாம்பவான் கபில்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல் விராட் கோலி விளையாடினால் அவரை வலுக்கட்டாயமாக நீக்க வேண்டிய நிலைமை விரைவில் வந்துவிடும் என்றும் கபில் தேவ் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

ட்ராப் பண்ணுங்க:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது விராட் கோலியை நீங்கள் டி20 அணியிலும் பெஞ்சில் அமர வைக்கும் சூழ்நிலை வந்துவிட்டது. உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டால் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் விராட் கோலியையும் நீக்கலாம். கடந்த பல வருடங்களாக விராட் கோலி தனது தரத்திற்கு பேட்டிங் செய்வதில்லை. அவர் தனது சிறப்பான செயல்பாடுகளால் இந்தப் பெயரைப் பெற்றுள்ளார். ஆனால் பெரிய பெயரை வாங்கி விட்டு தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படாமல் இருந்தால் அதற்காக இளம் வீரர்களை பெஞ்சில் அமர வைக்க முடியாது. விராட் கோலியை இந்திய அணியிலிருந்து வெளியேற்றும் அளவுக்கு இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்படும் நேர்மறை போட்டியை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Kapildev

இத்துடன் தென்ஆப்பிரிக்கா டி20 தொடரில் ஓய்வெடுத்த அவர் இங்கிலாந்து தொடரில் மட்டும் விளையாடிவிட்டு அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் ஓய்வு கேட்டுள்ளார். ஆனால் இப்படி சிறப்பாக செயல்படாமல் இடையிடையில் ஓய்வெடுப்பதற்கு பெயரும் “ட்ராப்” தான் என அதிருப்தியை தெரிவிக்கும் கபில் தேவ் இதுபற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “நீங்கள் இதை ஓய்வு என்று அழைக்கலாம். ஆனால் சிலர் இதை ட்ராப் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. தேர்வுக் குழுவினர் விராட் கோலியை தேர்வு செய்யவில்லையெனில் அவர் சிறப்பாக செயல்படாததே அதற்கு காரணமாகும்”

“நீங்கள் எப்போதும் ஒருவரின் பெயரை மட்டும் பார்க்க முடியாது. அவருடைய தற்போதைய பார்ம் பற்றி பார்க்க வேண்டும். நீங்கள் மிகச்சிறந்த வீரராக இருந்தாலும் தொடர்ச்சியாக 4 – 5 போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லையெனில் அதற்காக உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே பெயருக்காக மட்டுமே அணியில் இடம் கிடைக்காது என்று கபில் தேவ் மீண்டும் மீண்டும் விராட் கோலியை விமர்சித்து வருவது இந்திய வட்டாரத்தில் பெரிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement