இந்தியாவிடம் தோற்றால் பரவாயில்லை, அவங்களிடம் போய் தோற்றுவிட்டோமே – மீண்டும் ஆதங்கப்படும் வங்கதேசம், நடந்தது இதோ

Ban vs ZIm
- Advertisement -

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. கடந்த ஜூலை 30இல் துவங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஜிம்பாப்வே 2 – 1 என்ற கணக்கில் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தொடரையும் கோப்பையும் வென்று அசத்தியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அட்டகாசமாக செயல்பட்டு 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே ஆகஸ்ட் 10-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற சம்பிரதாய 3-வது போட்டியில் தோற்றது.

ஹராரே நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 256/9 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அஃபிப் ஹொசைன் 85* (81) ரன்களும் ஆனமல் 76 (71) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 257 என்ற இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 32.2 ஓவரில் 151 ரன்களுக்கு சுருண்டது. அதனால் இந்த சுற்றுப்பயணத்தில் எந்த ஒரு தொடரையும் கைப்பற்றாத வங்கதேசம் இந்த கடைசி போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

- Advertisement -

அசத்திய ஜிம்பாப்வே:
ஆனால் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்ற ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட்டில் 9 வருடங்களுக்குப் பின் வங்கதேசத்தை தோற்கடித்து மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டு கோப்பையை வென்றுள்ளது. முதலில் நடைபெற்ற டி20 தொடரையும் வென்ற அந்த அணி நீண்ட வருடங்களுக்குப் பின் இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளால் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு தலை நிமிரும் வகையிலான வெற்றியை பதிவு செய்துள்ளது பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இந்த 2 அணிகளுமே கத்துக்குட்டிகளாக பார்க்கப்படும் நிலையில் அதில் தனது சிறந்த செயல்பாடுகளால் வங்கதேசத்தை தோற்கடித்த ஜிம்பாப்வே இந்த சுற்றுப்பயணத்தில் வெற்றிக்கு தகுதியான அணியாகவே செயல்பட்டது. ஆனால் போயும் போயும் ஜிம்பாப்வேவிடம் தோற்றதை அவமானமாக நினைப்பதாக டி20 தொடரில் தோற்றபின் வங்கதேச அணியின் இயக்குனர் தெரிவித்தது பல ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. ஏனெனில் ஆண்டி பிளவர், கிராண்ட் பிளவர், ஹெத் ஸ்ட்ரிக் என உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கொண்டிருந்த ஜிம்பாவே 90களில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளையும் அசால்டாக தோற்கடித்த அணியாக வலம் வந்தது.

- Advertisement -

மீண்டும் ஆதங்கம்:
இருப்பினும் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் கிடைக்காததால் 2003 உலக கோப்பைக்கு பின் சுமாரான அணியாக ஜிம்பாப்வே மாறுவதற்கு பொருளாதார பிரச்சனைகளும் ஒரு முக்கிய காரணமாகியது. மறுபுறம் ஆரம்பம் முதலே எப்போதாவது ஒருசில வெற்றிகளைப் பெறும் வங்கதேசம் இதுநாள் வரை எப்போதுமே வலுவான அணியாக செயல்பட்டதில்லை. அந்த நிலைமையில் இந்த ஒருநாள் தொடரிலும் போயும் போயும் அவர்களிடம் தோற்று விட்டோமே என்ற வகையில் மீண்டும் வங்கதேசம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகளிடம் தோற்றிருந்தால் தாங்கள் இவ்வளவு வருத்தப்பட மாட்டோம் மற்றும் தங்களது மீது இவ்வளவு விமர்சனங்களும் வராது என்று தெரிவிக்கும் வங்கதேச நட்சத்திர வீரர் தமிம் இக்பால் வெற்றியை பதிவு செய்யும் அளவுக்கு தாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றும் ஒப்புக் கொண்டுள்ளார். இதுபற்றி இந்த தொடர் முடிந்ததும் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜிம்பாப்வேயிடம் தோற்றதற்கு பதிலாக இந்தியா அல்லது ஆஸ்திரேலியா அல்லது வேறு ஏதாவது டாப் அணியிடம் நாங்கள் தோற்றிருந்தால் எங்கள் மீது இவ்வளவு கேள்விகள் எழுந்திருக்காது”

“மேலும் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி போன்ற வீரர்கள் விளையாடியிருந்தால் அவர்கள் டாப் வீரர்கள் என்பதால் அவர்களை எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கூறலாம். இருப்பினும் எங்கள் தகுதிக்கு நாங்கள் விளையாடவில்லை. மேலும் எங்களைவிட தொடரை வெல்வதற்கு சிறந்த அணியாக ஜிம்பாப்வே செயல்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதால் முழு பாராட்டும் அவர்களைச் சேரும். ஏற்கனவே கூறியது போல இந்த தொடரில் தோற்றாலும் நாங்கள் வலுவான அணியாவோம். எப்போதுமே ஒரு அணி உச்சகட்டத்தில் செல்லாது என்பதால் வீழ்ச்சியை சந்திப்பது சகஜமானது”

“அதனால் தரவரிசையை பொருட்படுத்தாமல் நாங்கள் இதிலிருந்து பாடங்களை கற்றுள்ளோம். வரும் காலங்களில் 350 – 400 ரன்ளை அடிக்க வேண்டும் என்பதே எங்களின் லட்சியமாகும். அதை அடுத்த போட்டியில் செய்வோம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் அடுத்த வருடம் இந்தியாவில் உலக கோப்பை நடைபெற உள்ளதால் அங்கு வெற்றி பெற 300 ரன்கள் தேவைப்படுவதால் அதைச் செய்ய முயற்சிக்க உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement