எல்லாமே காசு, இந்தியாவை செமி பைனலுக்கு அனுப்புவதில் ஐசிசி குறியா இருக்காங்க – முன்னாள் பாக் வீரர் கண்டனம்

UMpires IND vs BAN vs PAk Virat Kohli Shakib Al Hasan Babar Azam
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் தெறிக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையின் இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிரான தன்னுடைய 4வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதனால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றால் அரை இறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நல்ல நிலைமைக்கு இந்தியா வந்துள்ளது.

Virat Kohli vs Shakib Al Hasan IND vs BAN

- Advertisement -

முன்னதாக அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் ஏராளமான சர்ச்சைகளும் எழுந்தன. முதலில் 64* (43) ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி 16வது ஓவரின் பவுன்ஸ் ஆகி வந்த கடைசி பந்தை அடித்துவிட்டு சிங்கிள் எடுத்துக்கொண்டே நோ-பால் கேட்டார். அந்த ஓவரில் ஏற்கனவே ஒரு பவுன்சர் பந்து வீசப்பட்டிருந்ததால் நடுவரும் நோ பால் வழங்கினார். ஆனால் அது தெரிந்தும் வேண்டுமென்றே பெரிய பெயரை வைத்துள்ள விராட் கோலிக்கும் இந்தியாவுக்கும் ஆதரவாக நடுவர்கள் செயல்படுவதாக நிறைய வங்கதேச ரசிகர்களும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் விமர்சித்தனர்.

எல்லாமே காசு:
அதிலும் குறிப்பாக விராட் கோலி கேட்கிறார் என்பதற்காக நோ-பால் கொடுக்காதீர்கள் என்று வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் களத்திலேயே நேரிடையாக நடுவரிடம் விவாதத்தில் ஈடுபட்டார். அது போக விராட் கோலி போலியாக ஃபீல்டிங் செய்ததை நடுவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய 5 ரன்கள் பெனால்டி கிடைக்காமல் தோற்றதாக போட்டி முடிந்த பின் வங்கதேச வீரர் நுருள் ஹசன் வெளிப்படையாக விமர்சித்தார். அதை விட 7வது ஓவரில் மழை வந்த போது வங்கதேசம் 17 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்த நிலையில் மழை நின்றதும் மைதானத்தில் அதிகப்படியான ஈரப்பதம் இருந்தும் இந்தியா வெல்வதற்காக நடுவர்கள் அவசர அவசரமாக போட்டியை மீண்டும் துவங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Shakib Al Hasan

சொல்லப்போனால் அது பற்றி போட்டியின் நடுவிலேயே நடுவர்களிடம் மீண்டும் சாகிப் அல் ஹசன் விவாதத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்தியா எப்படியாவது அரையிறுதிக்குள் நுழைந்து விட வேண்டும் என்பதற்காக மைதானத்தில் அதிகப்படியான ஈரப்பதம் இருப்பது தெரிந்தும் வேண்டுமென்றே நடுவர்கள் போட்டியை அவசர அவசரமாக துவங்கியதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாமல் போனால் பொருளாதார அளவில் நிறைய இழப்புகளை சந்திக்க வேண்டும் என்பதாலேயே இந்த தொடரில் அவர்களுக்கு ஆதரவாக அம்பயர்கள் செயல்படும் வகையில் பின்புலத்தில் ஐசிசி நடந்து கொள்வதாக கடுமையாக விமர்சித்துள்ள அவர் இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “மைதானம் எந்தளவுக்கு ஈரப்பதமாக இருந்தது என்பதை நீங்களே பார்த்தீர்கள். ஆனால் ஐசிசி இந்தியாவின் பக்கம் சாய்ந்துள்ளது”

Afridi

“அவர்கள் எப்படியும் இந்தியா அரையிறுதிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். மேலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் நடுவர்களாக இருந்த அதே நடுவர்கள் தான் இந்த போட்டியிலும் அதே போல் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அதனால் அந்த அம்பயர்களுக்கு இந்த வருடம் சிறந்த நடுவர்களுக்கான விருதும் கிடைக்கும்” என்று கூறினார். அதாவது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடுப்பளவு வந்த பந்தை விராட் கோலி நோ பால் கேட்டதால் வேண்டுமென்றே கொடுத்த அதே நடுவர்கள் தான் இப்போட்டியிலும் மீண்டும் அதே போல் இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட்டதாக அப்ரிடி கூறியுள்ளார்.

அதனால் இந்த வருடம் அவர்களுக்கு சிறந்த நடுவர்களுக்கான விருது கிடைக்கும் என்று சாடியுள்ள அவர் ஐசிசிக்கு பணம் முக்கியம் என்பதால் இந்தியாவின் பக்கம் சாய்ந்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார். பொதுவாக ஐசிசி என்றால் இந்திய கிரிக்கெட் கவுன்சில் என்று சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கமாகும். ஆனால் ஒரு முன்னாள் வீரரே வெளிப்படையாக இப்படி பேசியுள்ளது இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

Advertisement