ஐசிசி டி20 உ.கோ 2022 : உங்கள் ஓட்டு யாருக்கு? தொடர் நாயகன் விருதுக்காக ஐசிசி பரிந்துரைத்த 9 வீரர்களின் பட்டியல் இதோ

Virat Kohli Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் நாளிலிருந்தே எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறிய இந்த தொடரில் ஆரம்பத்திலேயே வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் வெளியேறி அதிர்ச்சியை சந்தித்த நிலையில் இடையே வலுவான இங்கிலாந்தை அயர்லாந்தும் பாகிஸ்தானை ஜிம்பாப்பேவும் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தன. ஆனால் தோல்வியை சந்தித்த அந்த அணிகள் நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் கோப்பைக்காக மோதுகின்றன என்பது மற்றுமொரு திருப்பமாகும்.

அதற்கு முன்பாகவே சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் என்று கருதப்பட்ட ஆஸ்திரேலியா ரன் ரேட் அடிப்படையில் செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதை விட 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியா ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வழக்கம் போல நாக் அவுட் போட்டியில் சொதப்பி வெளியேறியது. அப்படி எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறிய இந்த தொடரில் நிறைய வீரர்கள் தங்களது முழு மூச்சை கொடுத்து அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிக்காக போராடினார்கள்.

- Advertisement -

தொடர்நாயகன் யார்:
தற்போது இந்த தொடர் நிறைவு பெறுவதால் இந்த தொடரில் அபாரமாக செயல்பட்ட வீரருக்கு ஃபைனலுக்கு பின் தொடர் நாயகன் விருதை வழங்கி கௌரவிப்பதற்காக சிறப்பாக செயல்பட்ட 9 வீரர்களுடைய பட்டியலை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில் இந்த விருதை ரசிகர்கள் தான் ஆன்லைன் வாயிலாக தேர்வு செய்ய உள்ளார்கள். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் நீங்களும் நேரடியாக சென்று உங்களது வாக்கை உங்களுக்கு பிடித்த வீரர்களுக்கு அளிக்கலாம்.

1. விராட் கோலி: முதல் போட்டியிலேயே பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக கதை முடிந்ததாக கருதப்பட்ட இந்தியாவுக்கு வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த இவர் மொத்தம் 6 போட்டிகளில் 296 ரன்களை 98.66 என்ற அபாரமான சராசரியில் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். முன்னதாக 2014, 2016 ஆகிய உலககோப்பை தொடர்களின் நாயகன் விருதுகளையும் இவர் ஏற்கனவே வென்றுள்ளார்.

- Advertisement -

2. சூரியகுமார் யாதவ்: இந்த உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதிக்கு செல்ல பேட்டிங்கில் மற்றொரு முக்கிய காரணமாக திகழ்ந்த இவர் 6 போட்டிகளில் 239 ரன்களை 189.68 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரைட்டில் குவித்து அசத்தினார். குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சவாலான பிட்ச்சில் விராட் கோலியையே மிஞ்சும் அளவுக்கு அவரது பேட்டிங் இருந்தது.

3. சடாப் கான்: இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றதில் 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் முக்கியமான 78 ரன்களையும் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்தி வரும் இவரும் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

4. ஷாஹீன் அப்ரிடி: பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான இவர் காயத்திலிருந்து குணமடைந்து 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை 6.17 என்ற அபாரமான எக்கனாமியில் எடுத்து இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

5. சாம் கரண்: தமிழக ரசிகர்கள் சுட்டிக்குழந்தை என்றழைக்கும் இவர் இங்கிலாந்துக்காக இதுவரை 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை எடுத்து இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார். குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே போட்டியில் 5 விக்கெட்டைகளை சாய்த்து சாதனை படைத்தார்.

- Advertisement -

6. ஜோஸ் பட்லர்: இங்கிலாந்தின் கேப்டனாக முன்னின்று வழி நடத்தி வரும் இவர் 5 போட்டிகளில் 199 ரன்களை 143.16 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து வருகிறார். விக்கெட் கீப்பராக அசத்தும் இவர் இந்தியாவை அரையிறுதியில் அடித்து நொறுக்கியதை மறக்க முடியாது.

7. அலெக்ஸ் ஹேல்ஸ்: 4 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த இவர் இதுவரை 5 போட்டிகளில் 211 ரன்களை 148.59 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து பேட்டிங் துறையில் இங்கிலாந்தின் நம்பிக்கை நாயகனாக செயல்பட்டு வருகிறார்.

8. சிக்கந்தர் ராசா: ஜிம்பாப்வே அணியின் நம்பிக்கை நாயகனாக சமீப காலங்களில் அசத்தி வரும் இவர் இந்த தொடரில் 219 ரன்களையும் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டுள்ளார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக மறக்க முடியாத வெற்றியில் ஆட்டநாயகன் விருதையும் இவர் வென்றார்.

9. வணிந்து ஹஸரங்கா: சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தும் இலங்கையைச் சேர்ந்த இவர் 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 6.41 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

Advertisement