இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். அந்த வாய்ப்பில் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் அசத்திய ரோஹித் சர்மா தொடர்நாயகன் விருது வென்று அசத்தினார். அத்துடன் தம்முடைய கேரியரில் முதல் முறையாக ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி அவர் சாதனை படைத்தார்.
அடுத்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடரில் 2 சதங்கள், 1 அரை சதமடித்த விராட் கோலி தொடர்நாயகன் விருது வென்று அசத்தினார். அதே வேகத்தில் 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் 93 ரன்கள் குவித்த அவர் இந்தியாவில் வெற்றியில் பங்காற்றினார். மறுபுறம் அந்தப் போட்டிகளில் விராட் கோலியை காட்டிலும் ரோஹித் சர்மா கொஞ்சம் குறைவான ரன்களே அடித்தார்.
ஐசிசியின் தவறு:
அதன் காரணமாக ரோஹித் சர்மாவை முந்திய விராட் கோலி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் புதிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்தார். 2013 – 2021 வரையிலான காலகட்டங்களில் பெரும்பாலான வருடங்களில் நம்பர் ஒன் இடத்தில் ஜொலித்த அவர் அதன் பின் சரிவை சந்தித்தார். இருப்பினும் தற்போது மீண்டும் அசத்தும் விராட் கோலி 1408 நாட்கள் கழித்து நம்பர் ஒன் இடத்தை பிடித்து தன்னுடைய தரத்தை நிரூபித்தார்.
அதையும் சேர்த்து ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி ஒட்டுமொத்தமாக தம்முடைய கேரியரில் 825 நாட்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்ததாக ஐசிசி தங்களுடைய டிவிட்டரில் பதிவிட்டது. அதன் வாயிலாக அதிக நாட்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி 10வது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் ஐசிசி கூறியது. அதைப் பார்த்தால் விராட் கோலி ரசிகர்கள் உங்கள் பதிவு தவறாக இருப்பதாக ஐசிசிக்கு பதிலளித்தனர்.
திருத்திய ஐசிசி:
அத்துடன் கடந்த காலங்களில் விராட் கோலி நம்பர் ஒன் வேட்ஸ்மேனாக இருந்த வருடங்களையும் அவர்கள் ஆதாரங்களாக பதிவிட்டு ஐசிசிக்கு பதிலளித்தனர். அதனால் தவறுதலாக பதிவிட்ட தங்களது பதிவை நீக்கியுள்ள ஐசிசி தற்போது புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது. அதன் படி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் விராட் கோலி மொத்தம் 1547* நாட்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 64 ரன்ஸ்.. அவமானப்படுத்திய பயிற்சியாளரை பாராட்ட வைத்த ஹர்லீன்.. மும்பைக்கு எதிராக சாதனை
ஒட்டுமொத்த வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் விவ் ரிச்சர்ட்ஸ் 2306, பிரையன் லாரா 2079 நாட்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்களாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக விராட் கோலி 1547 நாட்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அதை சமூக வலைதளங்களில் விராட் கோலி ரசிகர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



