டி20 உ.கோ’யில் அனலை தெறிக்க விடப்போகும் பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – ஐசிசி வெளியிட்ட டாப் 8 பட்டியல் இதோ

Suryakumar Yadav vs RSA
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்ல உலகின் டாப் 16 அணிகள் போட்டியிடுகின்றன. பொதுவாகவே டி20 என்றால் அதில் விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்களை விட அதிரடி சரவெடியாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு தங்களது அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் பேட்ஸ்மேன்களையே ரசிகர்கள் பெரும்பாலும் விரும்புவார்கள்.

பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் மட்டும் தான் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் போலல்லாமல் சராசரியை விட ஸ்டிரைக் ரேட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏனெனில் அதில் 40 பந்துகளில் 50 ரன்கள் அடிப்பதை விட 20 பந்துகளில் 40 ரன்கள் அடிப்பதே வெற்றிக்கு உதவும். ஆனால் அம்மாதிரியான ஸ்டிரைக் ரேட்டில் அனைவராலும் ரன்களை குவிக்க முடியாது. சொல்லப்போனால் உலகத்தரம் வாய்ந்த மாஸ்டர் பேட்ஸ்மேன்கள் கூட அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவிக்க தடுமாறுவார்கள்.

- Advertisement -

ஐசிசியின் அதிரடி பட்டியல்:
மேலும் அதிரடியாக அடிப்பதற்கு கட்டுக்கோப்பான உடல்தகுதி, தனித்துவமான டெக்னிக் போன்ற அம்சங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்த உலக கோப்பையில் பவுலர்களை பந்தாடி தங்களது பேட்டில் நெருப்பை தெறிக்க விடப்போகும் சில அதிரடியான வீரர்களின் பட்டியலை அவர்களது ஸ்ட்ரைக் ரேட்டை மையப்படுத்தி ஐசிசி செய்தி வெளியிட்டுள்ளது. அதை பற்றி பார்ப்போம்:

1. சூர்யகுமார் யாதவ் 176.81: சர்வதேச கிரிக்கெட்டில் தாமதமாக அறிமுகமானாலும் மிடில் ஆர்டரில் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவதில் இவர் தனக்கென்று ஸ்டைலை உருவாக்கியுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது.

- Advertisement -

மேலும் அனைத்து விதமான ஷாட்களையும் அடிக்கும் திறமை பெற்றுள்ள இவர் இதுவரை 34 டி20 போட்டிகளில் 176.81 என்ற எரிமலையான ஸ்டிரைக் ரேட்டிலும் 38.70 என்ற நல்ல சராசரியிலும் பவுலர்களை புரட்டி எடுத்ததை போல இந்த உலக கோப்பையிலும் சரமாரியாக அடிப்பார் என்று ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2. ஜிம்மி நீசம் 163.65: நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டரான இவர் 53 போட்டிகளில் ஏற்கனவே 635 ரன்களை 163.65 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து வருவதாகத் தெரிவிக்கும் ஐசிசி 2021 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக விளாசிய 27 (11) ரன்களை பாராட்டியுள்ளது.

- Advertisement -

3. ஃபின் ஆலன் 161.72: மற்றொரு நியூசிலாந்து வீரரான இவர் புதுமுகமாக இருந்தாலும் 18 போட்டிகளில் 469 ரன்களை 161.72 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து வருவதாக தெரிவிக்கும் ஐசிசி இந்த உலகக் கோப்பையில் தன்னுடைய அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய சரவெடியாக செயல்படுவார் என்று பாராட்டியுள்ளது.

4. டிம் டேவிட் 160.80: சிங்கப்பூருகாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு அறிமுகமாகியுள்ள இவர் இதுவரை 160.80 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து வருவதாக ஐசிசி பாராட்டியுள்ளது. அதிலும் சிங்கப்பூர் அணிக்காக 165.95 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்த இவர் இம்முறை ஆஸ்திரேலியாவுக்காக பவுலர்களை பந்தாடுவார் என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

5. எவின் லெவிஸ் 155.51: வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரரான இவர் நீண்ட நாட்கள் கழித்து இந்த உலக கோப்பையில் கம்பேக் கொடுப்பதாக கூறும் ஐசிசி சராசரியாக ஒரு இன்னிங்ஸ்க்கு 2 சிக்சர்களை பறக்க விடுவதாக புள்ளி விவரத்தையும் கூறியுள்ளது.

மேலும் 155.51 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவிக்கும் இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் வெளியே அமர்ந்திருக்கும் ரசிகர்களிடம் பந்தை அனுப்புவார் என்றும் கூறியுள்ளது.

6. ரிலீ ரோசவ் 152.87: தென்ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர்களில் ஒருவரான இவர் 21 போட்டிகளில் 558 ரன்களை 152.87 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து வருவதால் இந்த உலகக் கோப்பையிலும் அசத்துவார் என்று ஐசிசி கூறியுள்ளது. அதிலும் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இவர் சதமடித்து நல்ல பார்மில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

7. ஐடன் மார்க்ரம் 151.16: தென் ஆப்பிரிக்காவின் மற்றொரு அதிரடி வீரரான இவர் 151.16 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 26 போட்டிகளில் 780 ரன்களை எடுத்தது போல இந்த உலக கோப்பையிலும் மிரட்டுவார் என்று ஐசிசி கூறியுள்ளது.

8. கிளென் மேக்ஸ்வெல் 150.40: இந்த தசாப்தத்தில் ஆஸ்திரேலியாவின் ஆபத்தான பேட்ஸ்மேனாக கருதப்படும் இவர் 150.40 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவிக்கும் திறனைப் பெற்றிருப்பதால் சொந்த மண்ணில் வெளுத்து வாங்குவார் என்று ஐசிசி கூறியுள்ளது. அதனால் ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைக்க இவரது பங்கு அவசியம் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுபோக ஹர்திக் பாண்டியா (148.49) தினேஷ் கார்த்திக் (146.40) ஹென்றிச் க்ளாஸென் (147.61) டேவிட் மில்லர் (145.49) மொயின் அலி (147.31) ஜோஸ் பட்லர் (144.23) ஆகியோரும் இந்த உலக கோப்பையில் ரசிகர்களை அதிரடியாக விளையாடி மகிழ்விப்பார்கள் என்றும் ஐசிசி பாராட்டியுள்ளது.

Advertisement