கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு சுருண்டதால் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தது.
அர்ஷ்தீப் சிங்கிற்கு தண்டனை விதித்த ஐ.சி.சி :
இந்த போட்டியின் போது நியூசிலாந்து அணி இரண்டாவதாக பேட்டிங் செய்கையில் 11 வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங்கின் ஓவரில் டேரல் மிட்சம் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை அடிக்கவே அர்ஷ்தீப் சிங் அதிருப்தி அடைந்தார். பின்னர் அடுத்த பந்தை டேரல் மிட்சல் தடுத்தாடிய போது பந்தை பிடித்த அர்ஷ்தீப் சிங் தேவையில்லாமல் டேரல் மிட்சலை நோக்கி எறிந்தார்.
அவர் எறிந்த அந்த பந்து டேரல் மிட்சலின் தொடை பகுதியில் தாக்கியது. இதனால் கோபமடைந்த டேரல் மிட்சல் அர்ஷ்தீப் சிங்கை முறைத்தவாறு திட்டினார். அதோடு நடுவரிடமும் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்தார். அந்நேரத்தில் டேரல் மிட்சலை சமாதானப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவரை ஆசுவாசப்படுத்தி அனுப்பினார்.
பின்னர் போட்டி முடிந்து அர்ஷ்தீப் சிங்கும் தான் தெரிந்தே பந்தை எறியவில்லை என்றும் எதேர்ச்சையாக பந்து அவரது மேல் பட்டுவிட்டது என்று கூறி நேரடியாக மிட்சலிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அம்பயர் ஐசிசி-யிடம் புகார் அளிக்கவே அர்ஷ்தீப் சிங்குக்கு ஐ.சி.சி போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீத அபராதம் விதித்து ஒரு தகுதி இழப்பு புள்ளியையும் வழங்கி அதிரடி காட்டியுள்ளது.
இதையும் படிங்க : கப் ஜெயிச்சிட்டேன்.. ஆனா அருகில் நீங்கள் இல்லையே.. மறைந்த தந்தையை நினைத்து – ரிங்கு சிங் நெகிழ்ச்சி பதிவு
மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், வீரர்களின் நன்னடத்தையை மீறியதற்காகவும் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த 24 மாதங்களுக்குள் அர்ஷ்தீப் சிங் 4 அல்லது அதற்கு மேல் தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



