இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்கியது. அதில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா கடுமையான போராட்டத்துக்குப் பின் 416 ரன்கள் சேர்த்தது.
விராட் கோலி, புஜாரா உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 98/5 என திணறிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் அதிரடியாக சதமடித்து 146 ரன்கள் குவிக்க அவருடன் பொறுமையாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
கோட்டைவிட்ட இந்தியா:
அதை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் வெறும் 284 ரன்களுக்கு சுருண்டது. ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக அதிரடி காட்டிய ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 132 என்ற மிகப்பெரிய ரன்களை முன்னிலையாக பெற்ற இந்தியா அபாரமாக பேட்டிங் செய்து 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2-வது இன்னிங்ஸ்சில் எழுச்சியடைந்ததை போல் அற்புதமாக பந்துவீசிய இங்கிலாந்திடம் சரணடைந்த இந்தியா வெறும் 245 ரன்களுக்கு சுருண்டது. விராட் கோலி, விகாரி, ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற முக்கிய வீரர்கள் 2-வது வாய்ப்பிலும் சொதப்பிய நிலையில் அதிகபட்சமாக பொறுப்பை காட்டிய புஜாரா 66 ரன்களும் நிதானத்துடன் விளையாடிய ரிஷப் பண்ட் 57 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
இங்கிலாந்து மிரட்டல்:
இறுதியில் 378 என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து தொடக்க வீரர்களின் அதிரடியால் 107/0 என்ற அற்புதமான தொடக்கத்தை பெற்று இந்தியாவை மிரட்டியது. அப்போது லீஸ் 56, கிராவ்லி 46, போப் 0 என 3 பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து அவுட் செய்த இந்தியா பதிலடி கொடுத்தது. ஆனால் அடுத்ததாக களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை குவித்து 4-வது நாளிலேயே இந்தியாவின் வெற்றியை கேள்விக்குறியாக்கினார். ஏற்கனவே முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் நிலையில் சுமாராக பந்துவீசிய இந்தியாவை அற்புதமாக எதிர்கொண்டு கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த அவர்களில் ரூட் 142* ரன்களும் பேர்ஸ்டோ 115* ரன்களும் எடுத்து அடுத்தடுத்த சதங்களை விளாசி சூப்பரான பினிஷிங் கொடுத்தனர்.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேஸிங் செய்து மிரட்டல் வெற்றி பெற்ற அந்த அணி 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் 3 நாட்கள் அபாரமாக செயல்பட்ட இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பி 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.
முந்திய பாகிஸ்தான்:
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்ற இந்த தொடரின் இப்போட்டியில் 2 ஓவர்கள் மெதுவாக பந்து வீசியதற்காக விதிமுறைப்படி 2 புள்ளிகளை கழித்து தண்டனையாக விதித்துள்ள ஐசிசி இந்திய வீரர்களின் சம்பளத்திலிருந்து 40% அபராதமாக விதித்துள்ளது. இது பற்றி போட்டியின் நடுவர்கள் புகார் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஐசிசி அதை இந்திய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்கனவே 3-வது இடத்திலிருந்த இந்தியா 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் 4-வது இடத்தில் இருந்த பரம எதிரியான பாகிஸ்தான் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்தியா 2023இல் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பங்கேற்க அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றே தீரவேண்டும் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் இதோ:
1. ஆஸ்திரேலியா : 77.78%
2. தென்ஆப்பிரிக்கா : 71.43%
3. பாகிஸ்தான் : 52.38%
4. இந்தியா : 52.08%
5. வெஸ்ட் இண்டீஸ் : 50.00%
இதனால் ஏற்கனவே படுதோல்வியை சந்தித்து சோகமடைந்துள்ள இந்திய ரசிகர்கள் இது வேறயா என்று சமூக வலைதளங்களில் சோகமாக காணப்படுகின்றனர். ஏனெனில் கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இதேபோல் ஒருசில புள்ளிகள் குறைக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பறிபோனது குறிப்பிடத்தக்கது.



