இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்தது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அந்தத் தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது.
அதற்கு அந்த சீனியர்கள் 10 வருடத்திற்கும் மேலாக ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடாமல் இருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது போக இந்திய வீரர்களிடம் போதுமான ஒற்றுமை இல்லை என்று செய்திகள் வெளியாகின. மேலும் ரோகித் இல்லாத போது பும்ராவுக்கு பதிலாக ஒரு சீனியர் வீரர் ஆஸ்திரேலியாவில் கேப்டனாக செயல்பட விரும்பியதாகவும் செய்திகள் வெளியாகின.
தவறை திருத்திய பிசிசிஐ:
அந்த சூழ்நிலையில் அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணிக்கு பிசிசிஐ புதிய 10 கட்டுப்பாட்டு விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்தது. அதில் தேசிய அணிக்காக விளையாடிய நேரம் போக அனைத்து வீரர்களும் உள்ளூரில் விளையாட வேண்டும். அனைத்து வீரர்களும் ஒன்றாக ஒரே ஹோட்டலில் தங்கி பயிற்சிக்கு சென்று விளையாட வேண்டும். வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
குறிப்பிட்ட எடைக்கு மேல் கொண்டு வரப்படும் உடைமைகளுக்கும் குறிப்பிட்ட நாட்களில் குடும்பத்தை சந்திப்பதற்கும் வீரர்கள் தங்களுடைய சொந்த பணத்தை செலவிட வேண்டும். இது போன்ற விதிமுறைகளை மீறினால் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பை வரவேற்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் ஹீலி உலகின் மற்ற நாடுகளும் இந்தியாவை பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
ஃபாலோ பண்ணுங்க:
இது பற்றி சென் ரேடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “இது இந்திய கிரிக்கெட்டை மறு சீரமைக்கும் விஷயமாகும். இது இந்திய கிரிக்கெட்டின் நிர்வாகிகளிடமிருந்து கண்டிப்பான வலுவான பதிலடியாகும். உண்மையில் இந்த அறிவிப்பின் வாயிலாக அவர்கள் தங்களுடைய தேசிய அணியின் கட்டுப்பாடு மிகவும் மோசமாக கீழே சரிந்தது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள்”
இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து முதல் டி20 நடைபெறும் கொல்கத்தா மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“மேற்கண்ட சிக்கல்கள் நீண்ட காலமாக கண்டுகொள்ளப்படாமல் போனால் அசாதாரணமான சூழ்நிலை உருவாகும். விளையாட்டின் அதிகார மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கனவை வீரர்களும் நிர்வாகிகளும் அவமதித்திருக்கலாம். எனவே ஆஸ்திரேலியா மற்றும் மற்ற நாடுகளும் இது போன்ற விஷயங்களை எவ்வளவு தூரம் தடுக்க முடியும் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். விளைவுகளை சந்திக்கும் முன் விழிப்புடன் இருங்கள்” என்று கூறினார்.



