கடந்த சில தினங்களாகவே சமூகவலைதளத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் குறித்த தகவல்களே அதிக அளவில் பரவிவருகின்றன. ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது தொடரில் விளையாட தயாராக உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை(நாளை) துவங்க உள்ளது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டதால் இம்முறையும் சில தொடர்களை கைப்பற்ற தீவிரம் காட்டும்.
அதேபோன்று ஆஸ்திரேலிய அணியும் கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழி வாங்கும் விதமாக இந்திய அணியை வீழ்த்தி ஆக வேண்டுமென்று மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : கேப்டன் பொறுப்பை பொருத்தவரை கோலியைப் போலவே ரஹானேவும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த கூடியவர். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கூட ஒரு டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நேர்மறையான சிந்தனைகளுடன் செயல்பட கூடியவர்.

அவர் அமைதியானவர் என்று பலர் கூறி கேட்டு இருக்கிறேன். அது தவறான கணிப்பு அவர் ஆக்ரோஷமானவர் என்பதை நீங்கள் இந்த தொடரில் பார்க்கலாம். அவரை அவுட் ஆக்குவது மிக கடினம். ஆஸ்திரேலிய பவுலர்கள் அவரின் விக்கெட்டை கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ரோஹித் இன்னும் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய திரும்பாததால் கடைசி மூன்று போட்டிகளுக்கான டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.



