இந்திய கிரிக்கெட் அணி கடந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்தித்தது. அதனால் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அந்த தோல்விக்கு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருடைய சுமாரான பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் இளம் வீரர்களுக்கு வழி விட்டு அவர்கள் ஓய்வு பெறலாம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தம்முடைய அனுபவத்தால் ஜூன் மாதம் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட விராட் கோலி தகுதியானவர் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். அதே சமயம் சாம் கோன்ஸ்டஸ் தோளில் இடித்தது போன்ற சேட்டைகளை விராட் கோலி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் விமர்சித்துள்ளார்.
அனுபவம் உதவும்:
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தன்னைத்தானே நீக்கிக்கொண்ட ரோகித் சர்மா இங்கிலாந்தில் விளையாடுவது மிகவும் கடினம் என்று அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இடத்தை பேட்டிங்கில் நிரப்ப கேஎல் ராகுலும் கேப்டனாக நிரப்ப பும்ராவும் இருப்பதாக இயன் சேப்பல் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்தில் விராட் கோலியின் அனுபவம் விலைமதிப்பற்றதாக இருக்கும்”
“இருப்பினும் தொடர்ச்சியாக அசத்துவதில் அவர் முன்னேற வேண்டும். அவருடைய மதிப்புமிக்க ஆலோசனைகள் இளம் வீரர்களுக்கு உதவும். அதே சமயம் சாம் கோன்ஸ்டஸ்க்கு எதிராக தோளில் இடித்தது போன்ற தேவையற்ற செயல்களை அவர் நிறுத்த வேண்டும். ஒருவேளை விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அவருக்கும் ரோகித் சர்மாவுக்கும் இழப்பு”
ரோகித் கடினம்:
“அது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தும். விராட், ரோஹித் ஆகியோர் விஷயத்தில் இந்தியா கடினமான முடிவுகளை எடுக்குமா என்பதும் 2 பெரிய கேள்வியாகும். விரைவில் 38 வயதை தொடும் ரோஹித் இங்கிலாந்தில் 5 போட்டிகளில் விளையாடும் அளவுக்கு தற்சமயத்தில் திறமைகளைக் கொண்டிருக்கிறாரா என்பது சந்தேகமாகும்”
இதையும் படிங்க: விமர்சிக்க மாட்டேன்.. அது முடியும்னா விளையாடுங்க இல்லனா ஓய்வை அறிவிங்க.. ரோஹித், கோலிக்கு கபில் தேவ் அட்வைஸ்
“ஏனெனில் ரோஹித் சர்மா டெக்னிக்கல் அளவில் தடுமாறுவதால் அவருக்கு இந்திய அணி ஓப்பனிங் மற்றும் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அவருக்கு பதில் கே.எல். ராகுல் நல்ல துவக்க வீரராக இருக்கிறார். அதே சமயம் காயத்தால் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடாமல் போனால் அது தலைவலியாகும். ஆஸ்திரேலியாவில் அவர் அற்புதமான பவுலர் மற்றும் நல்ல கேப்டன் என்பதை காண்பித்தார். ஆனால் இங்கிலாந்தில் அசத்துவதற்கு அவருக்கு இரு துறைகளிலும் ஆதரவு தேவை” என்று கூறினார்.



