குழந்தையா இருந்த எனக்கு டி20 கிரிக்கெட்டை கத்துக் கொடுத்ததை அவர் தான் – சிஎஸ்கே வீரர் பதிரனா நெகிழ்ச்சி பேட்டி

- Advertisement -

கோடைகாலத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. அந்த வெற்றியில் ஜடேஜா முதல் ஓய்வு பெற்ற ராயுடு வரை அனைவரும் முக்கிய பங்காற்றியதை போலவே மதிசா பதிரனா பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றினார். இலங்கையைச் சேர்ந்த அவர் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்காவின் ஸ்லிங்கா ஆக்சனை பின்பற்றி அண்டர்-19 உலகக்கோப்பை தொடரில் விளையாடி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஆரம்பத்தில் நெட் பவுலராக விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் 2022 சீசனில் கடைசிக்கட்ட சில போட்டிகளில் வாய்ப்பு பெற்று அசத்தினார். அதன் காரணமாக இந்த வருடம் 12 போட்டிகளில் வாய்ப்பு பெற்று 19 விக்கெட்டுகளை 8.01 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்த அவர் பெரும்பாலும் டெத் ஓவர்களில் மலிங்காவை போலவே துல்லியமான யார்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து சென்னையின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதனால் சாதாரணமாகவே யாரையும் அவ்வளவு எளிதில் பாராட்டாத தோனி செய்தியாளர்கள் சந்திப்பில் அவரை பல தருணங்களில் பாராட்டினார்.

- Advertisement -

பதிரனா நெகிழ்ச்சி:
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடினால் உலகக்கோப்பை கொண்ட தொடர்களில் பதிரான மேஜிக் செய்வார் என்று தோனி பாராட்டியது இலங்கை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதனால் இலங்கைக்கு வருங்காலத்திற்கு தேவையான வைரத்தை தோனி பட்டை தீட்டி வருவதாக பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே பாராட்டினார். இந்நிலையில் பெரிய அளவில் அனுபவமில்லாத குழந்தையை போல் இருந்த தமக்கு ஐபிஎல் போன்ற அழுத்தமான டி20 கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தோனி கற்றுக் கொடுத்ததாக பதிரனா வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு இளம் வீரருக்கு அவரைப் போன்ற ஒருவர் தன்னம்பிக்கை கொடுப்பது உங்களுடைய கேரியரில் மிகப்பெரிய உத்வேகமாக அமையும். அவரைப் போன்ற ஒருவர் எனக்கு ஆதரவு கொடுத்து என்னால் இந்த அளவில் சாதிக்க முடியும் என்று நம்பினார். எனக்கு மட்டுமல்லாமல் தோனி அனைவருக்குமே தன்னம்பிக்கையை கொடுக்கிறார். சென்னை அணியில் 4 – 5 டாப் வீரர்கள் காயத்தை சந்தித்திருந்த போது அவர் இளம் வீரர்கள் மீது நம்பிக்கை காட்டியது மிகவும் சிறந்ததாகும்”

- Advertisement -

“தோனியிடமிருந்து நான் நிறைய கற்றுள்ளேன். முதலில் அமைதியாக இருப்பது. அதனால் தான் அவர் வெற்றிகரமாக இருக்கிறார். அதே போல 42 வயதிலும் ஃபிட்டான வீரராக இருக்கும் அவர் அனைவருக்கும் உத்வேகத்தை கொடுப்பவராக இருக்கிறார். சென்னை அணியில் நான் இருந்த போது குழந்தையாக இருந்தேன். யாருக்கும் என்னை பற்றி அதிகம் தெரியாது. இருப்பினும் அவர்கள் எனக்கு பயிற்சிகளை கொடுத்து நிறையவற்றை கற்றுக் கொடுத்தனர்”

“அதனால் தற்போது எந்த வகையான டி20 கிரிக்கெட்டிலும் என்னுடைய 4 ஓவர்களை வீசி சமமாக எப்படி செயல்பட முடியும் என்பதை நான் கற்றுள்ளேன். மேலும் நான் காயங்களை சந்திக்காமல் இருந்தால் என்னுடைய அணிக்காகவும் நாட்டுக்காகவும் நிறைய வெற்றிகளை சாதிக்க முடியும் என்று தோனி சொன்னார்” என்று கூறினார். தற்போது நடைபெற்று வரும் இலங்கை பிரிமியர் லீக் தொடரில் கொழும்பு அணிக்காக விளையாடும் அவர் 8 போட்டிகளில் 12 விக்கெட்களை எடுத்து அசத்தி வருகிறார்.

மேலும் ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுக்கும் போது ரொனால்டோ போல கொண்டாடுவது பற்றியும் ஜாம்பவான் மலிங்கா தமக்கு உதவுவதைப் பற்றியும் அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நாம் அனைவருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டவை தெரியும் நான் அவருடைய பெரிய ரசிகன். அவரை வைத்தே இந்த புதிய செலப்ரேசனை நான் செய்கிறேன்.ம் என்னுடைய ஆக்சன் மற்றும் பவுலிங்கில் நான் தொடர்ந்து முன்னேறி வருகிறேன். மலிங்கா என்னை பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஏனெனில் அவரை போல் பந்து வீசும் ஒருவரை அவர் பார்க்கிறார்” என்று கூறினார்.

Advertisement