அவர் லெஜெண்ட், அவரோட இடத்துக்கு நான் எப்போதும் வரமாட்டேன் – எனக்கு 5வது இடமே போதும், தீபக் ஹூடா ஓப்பன்டாக்

Deepak-Hooda
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. உலகக் கோப்பையில் தோல்விக்கு காரணமாகும் வகையில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி களமிறங்கி அசத்தியுள்ளது. மேலும் சீனியர்கள் இல்லாததால் இத்தொடரில் இஷான் கிசான் – ரிஷப் பண்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில் 3வது இடத்தில் வழக்கமாக களமிறங்கும் விராட் கோலி இல்லாததால் சூரியகுமார் யாதவ் களமிறங்கி சதமடித்து வெற்றி பெற வைத்தார்.

Deepak-Hooda-and-Pandya

- Advertisement -

அதனால் வழக்கமாக சூரியகுமார் களமிறங்கும் 4வது இடத்தில் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கிய நிலையில் 5வது இடத்தில் இளம் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா களமிறங்கினார். அதில் 2வது போட்டியில் டக் அவுட்டான அவர் மழையால் டையில் முடிந்த 3வது போட்டியில் 9* ரன்களை எடுத்து முக்கிய பங்காற்றினார். மேலும் 2வது போட்டியில் டக் அவுட்டானாலும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அவர் சமீப காலங்களாகவே இது போன்ற நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருங்கால நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

அவர் லெஜெண்ட்டுங்க:

உள்ளூர் கிரிக்கெட்டில் க்ருனால் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதலில் ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்து அந்த அணிக்காக அசத்தலாக செயல்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்காக 3வது இடத்தில் களமிறங்கி நல்ல ரன்களை சேர்த்தார். மேலும் ஐபிஎல் தொடருக்கு பின் நடந்த அயர்லாந்து டி20 தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி சதமடித்த அவர் பெரும்பாலும் 3வது இடத்தில் விளையாட பழகியுள்ளார்.

hooda 1

ஆனால் இந்திய அணியில் தற்சமயத்தில் அந்த இடத்தில் விராட் கோலி எனும் ஜாம்பவான் விளையாடுவதால் அதற்கு ஆசைப்படவில்லை என்று தெரிவிக்கும் தீபக் ஹூடா 5வது இடம் போன்ற எந்த இடம் கிடைத்தாலும் அதில் அசத்துவதற்கு தயாராக உள்ளதாக நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் 5வது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் 3வது இடத்தில் ஏற்கனவே எங்களிடம் ஒரு லெஜெண்ட் உள்ளார். அதனால் அந்த இடம் எனக்கு கிடைக்காது என்பதை உணர்ந்துள்ள நான் 5, 6 போன்ற இடங்களில் விளையாடுவதற்கு என்னை உட்படுத்திக் கொள்ள தயாராகி வருகிறேன்”

- Advertisement -

“எனக்கு கொடுக்கப்படும் எந்த வேலையாக இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றார் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். நான் பேட்டிங் ஆல் ரவுண்டர் என்பதால் அதிகமாக ரன்களை அடிப்பது முக்கியமாகும். அதே சமயம் அணிக்கு தேவைப்படும் நேரங்களில் என்னை பந்து வீச அழைத்தால் அதில் அசத்துவதற்காக என்னுடைய பந்து வீச்சிலும் நான் வேலை செய்து வருகிறேன். இந்தியாவுக்காக நான் அறிமுகமானது முதல் ஆல் ரவுண்டராக விளையாடி வருகிறேன். அதனால் கடந்த 3 மாதங்களில் இந்தியாவுக்காக விளையாடாத நேரங்களில் என்னுடைய பந்து வீச்சில் நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன்” என்று கூறினார்.

Deepak Hooda

அடுத்ததாக நடைபெறும் முக்கிய தொடர்களில் விராட் கோலி போன்ற மகத்தான பேட்ஸ்மேன் மீண்டும் வந்து விடுவார் என்பதால் அணியின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள முயற்சித்து வருவதாக தீபக் ஹூடா கூறியுள்ளார். மேலும் இந்திய பேட்ஸ்மேன்கள் பந்து வீசாமல் இருப்பதே ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் தோல்வியை சந்திக்க காரணம் என்று சமீப காலங்களாகவே அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். எனவே அந்தப் பிரச்சினையை போக்கும் வகையில் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுவதற்கு பயிற்சிகளை எடுத்து வருவதாக தெரிவிக்கும் தீபக் ஹூடா அதை சரியாக செய்தாலே இந்திய அணியில் தமக்கு இடம் உறுதியாக கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement