மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சர்துல் தாக்கூர் 2018 ஐபிஎல் கோப்பையை தோனி தலைமையில் வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாகவே 3 வகையான இந்திய அணியிலும் அறிமுகமான அவர் ஒரு கட்டத்தில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக 2021 லண்டன், காபா டெஸ்ட் போட்டிகளில் ஆல் ரவுண்டராக இந்தியாவின் வெற்றியில் அவர் பங்காற்றியதை மறக்க முடியாது.
அதனால் லார்ட் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட தாக்கூர் சமீப காலங்களில் அசத்தவில்லை. அதன் காரணமாக கழற்றி விடப்பட்ட அவர் தற்போது மும்பை அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் 402* ரன்களும் 33* விக்கெட்டுகளும் எடுத்துள்ள அவர் மும்பை செமி ஃபைனலுக்குச் செல்ல முக்கிய பங்காற்றியுள்ளார்.
அஸ்வின் போல:
இந்நிலையில் ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போல தம்மால் அசத்த முடியும் என்பதால் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்குமாறு தாக்கூர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய தன்னம்பிக்கை உயர்வாக இருக்கிறது. நாட்டுக்காக விளையாடுவதை விட வேறு பெரிய உத்வேகம் இருக்க முடியாது. இந்திய அணியை பார்க்கும் போது எங்கே விளையாடினாலும் 7, 8வது விளையாடும் பவுலர் கொஞ்சம் பேட்டிங் செய்பவராக இருக்க வேண்டியுள்ளது”
“அந்தத் திறமையை அஸ்வின் மற்றும் ஜடேஜா காண்பித்தார்கள். இந்திய அணிக்காக வெளிப்படுத்த என்னிடமும் அந்தத் திறமை இருப்பதாக நம்புகிறேன். 3, 4வது வேகப்பந்து வீச்சாளராக விளையாடினாலும் நான் யாருக்கும் குறைவானவன் அல்ல. மும்பை அணியில் நான் முதன்மை பவுலராக இருப்பதால் புதிய பந்தில் பவுலிங் செய்கிறேன். எனவே பும்ரா ஒரு பக்கத்தில் வீசினால் மற்றொரு பக்கத்தில் என்னால் வீச முடியும்”
வாய்ப்பு கொடுங்க:
“சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் அட்ஜஸ் செய்யும் திறமை என்னிடம் இருப்பதாகவும் நம்புகிறேன். டி20 கிரிக்கெட்டிலும் பும்ராவுடன் நான் பவுலிங் செய்துள்ளேன். டெத் ஓவர்களிலும் அதிகமாக பவுலிங் செய்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பழைய பந்தில் பவுலிங் செய்துள்ள என்னால் 8 – 11 வரையிலான இடங்களில் பேட்டிங் செய்து மதிப்புள்ள ரன்களை எடுக்க முடியும்”
இதையும் படிங்க: 500 ரன்ஸ் அடிச்சும் ஸ்ரேயாஸை கழற்றி விடப் பார்த்தது ஏன்? ஜெய்ஸ்வால் விடுவிக்கப்பட்டது ஏன்? கம்பீர் பதில்
“குறிப்பாக இங்கிலாந்து தொடரில் எக்ஸ்ட்ரா ரன்கள் முக்கியமானதாக இருக்கும். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் என்னுடைய பெயர் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்தது. பின்னர் சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்திய நான் அதில் வாய்ப்பு கிடைக்காததால் அடுத்ததாக இங்கிலாந்து தொடரில் கவனம் செலுத்துகிறேன். அதற்கான ஆர்வத்தைக் கொண்டுள்ள நான் அதற்குத் தகுந்த கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகிறேன்” என்று கூறினார்.



