உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடத் துவங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் 2018 முதல் பெஞ்சில் அமர்ந்து வந்த அவர் 2023 சீசனில் குஜராத்துக்கு எதிராக கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்து கொல்கத்தாவுக்கு அசாத்தியமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
2023ஆம் ஆண்டு அயர்லாந்து, தென்னாபிரிக்கா போன்ற வெளிநாடுகளில் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் செய்தார். அதனால் தோனி போலவே இந்திய அணிக்கு மற்றொரு ஃபினிஷர் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டினர். இதுவரை 33 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு 546 ரன்களை 161.07 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.
டி20 பிளேயர் கிடையாது:
கடந்த ஐபிஎல் தொடரில் தடுமாற்றமாக விளையாடிய அவர் அடுத்த ஆசியக் கோப்பையில் மீண்டும் அசத்துவதற்கு தயாராகி வருகிறார். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில் சமீபத்தில் அவர் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் தம்மை டி20 பிளேயர் என்று நினைப்பதாக ரிங்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் உள்ளூர் போட்டிகளில் 55 சராசரியை வைத்துள்ள தமக்கு இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 2026 டி20 உலகக் கோப்பையிலும் விளையாடுவதே லட்சியம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் சிக்சர்கள் அடிக்கும் போது ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நன்றியுடையவனாக இருக்கிறேன். ஆனால் ரஞ்சிக் கோப்பையில் என்னுடைய சராசரி நன்றாக இருக்கிறது”
ரிங்குவின் 2 கனவு:
“என்னுடைய சராசரி 55. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதையும் நான் விரும்புகிறேன். இந்தியாவுக்காக 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நான் அங்கேயும் நன்றாக செயல்பட்டுள்ளேன். எனவே நான் டி20 பிளேயர் மட்டும் கிடையாது. வாய்ப்பு கிடைத்தால் அனைத்து விதமான ஃபார்மெட்டிலும் அசத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு ஃபார்மட்டில் மட்டுமே அசத்தக்கூடியவர் என்று என்னை அச்சிடுவதை நான் விரும்பவில்லை”
இதையும் படிங்க: 122 ரன்ஸ்.. 5 வருடம் கழித்து இலங்கை சாதனை வெற்றி.. நிஷாங்கா சதத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி அசத்தல்
“ஆல் ஃபார்மட் பிளேயராக என்னைப் பார்க்கும் எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடுவதே லட்சிய கனவாகும். அந்த வாய்ப்பு கிடைத்தால் பிடித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். டி20 உலகக்கோப்பை அணியில் அங்கமாக இருந்து கோப்பையை தூக்குவதே என்னுடைய மற்றொரு கனவு. அதற்காக கடவுளை தொடர்ந்து வேண்டிக்கொள்கிறேன். அடுத்து வரும் தொடர்களில் அசத்தினால் உலகக் கோப்பை வாய்ப்பு தெளிவாகும். அதுவே என்னுடைய பெரிய இலக்கு. ஆசியக் கோப்பையில் அசத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறினார்.



