நான் அவருடைய ரசிகன் – இளம் இந்திய வீரரின் ஜெர்ஸியை வாங்கிய இளம் ஜிம்பாப்வே வீரர் பூரிப்புடன் பேசியது இதோ

Brad Evans ZIm
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்த ஜிம்பாப்வே ஆகஸ்ட் 22ஆம் தேதியான நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் போராடி வெறும் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 289/9 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக 15 பவுண்டரி 1 சிக்சருடன் தனது முதல் சதமடித்த சுப்மன் கில் 130 (97) ரன்களும் இஷான் கிசான் 50 (61) ரன்களும், ஷிகர் தவான் 40 (68) ரன்களும் எடுக்க ஜிம்பாப்வே சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ப்ராட் எவன்ஸ் 5 விக்கெட்களை சாய்த்தார்.

அதன்பின் 290 ரன்களை துரத்திய அந்த அணிக்கு சீன் வில்லியம்ஸ் 45 ரன்கள் எடுத்தது தவிர கயா, கேப்டன் சகப்வா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் 169/7 என சரிந்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் மிரட்டிய நம்பிக்கை நட்சத்திரம் சிகந்தர் ராசா 8வது விக்கெட்டுக்கு ப்ராட் எவன்ஸ் உடன் இணைந்து 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசிவரை வெற்றிக்கு போராடினார். ஆனால் கடைசி நேரத்தில் ப்ராட் எவன்ஸ் 28 (36) ரன்களிலும் 9 பவுண்டரி 3 சிக்சருடன் சிகந்தர் ராசா 115 (95) ரன்களிலும் ஆட்டமிழந்ததால் 49.3 ஓவரில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பை நழுவ விட்டது.

- Advertisement -

அசத்திய கில்:
அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் இளம் வீரர்களுடன் ஒயிட்வாஷ் வெற்றி பெற்ற இந்தியா கோப்பையை வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு 130 ரன்களும் கடைசி நேரத்தில் மிரட்டிய சிகந்தர் ராசா கொடுத்த கேட்ச்சை கச்சிதமாக பிடித்த சுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அத்துடன் 82*, 33, 130 என இந்த தொடர் முழுவதும் பெரிய ரன்களையும் 5 கேட்ச்களையும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பங்கேற்றதால் தொடர்நாயகன் விருதையும் அவரே தட்டி சென்றார். சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இதேபோல் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 22 வயதுக்கு முன் வெளிநாட்டில் 2 தொடர் நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்தியா வென்ற 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையின் தொடர்நாயகன் விருதையும் வென்றுள்ள அவர் 2019 ஐபிஎல் தொடரின் சிறந்த இளம் வீரர் விருதையும் வென்று சீனியர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் சுமாராக செயல்பட்டு காயத்தால் வெளியேறிய அவர் கடந்த 2021இல் காபா மைதானத்தில் இந்தியா பதிவு செய்த வரலாற்று டெஸ்ட் வெற்றிகு 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

கில் ரசிகன்:
தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் முத்திரை பதிக்க துவங்கியுள்ள இவர் வருங்கால இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக வருவார் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர். இந்நிலையில் 22 வயதே ஆனாலும் இவ்வளவு திறமைகள் வாய்ந்த சுப்மன் கில்லுக்கு நான் ரசிகன் என்று தெரிவிக்கும் ஜிம்பாப்வே இளம் வீரர் ப்ராட் எவன்ஸ் நேற்றைய போட்டியின் முடிவில் அவருடைய ஜெர்சியை பரிசாக பெற்றதாகவும் பூரிப்புடன் பேசினார்.

முன்னாள் ஜிம்பாப்வே வீரர் கிரைக் எவன்ஸ் மகனான இவர் தன்னுடைய 25 வயதில் சமீபத்திய வங்கதேச ஒருநாள் தொடரில் அறிமுகமானார். நேற்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளையும் 28 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு போராடிய இவர் இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் பேசியது பின்வருமாறு. “அவர் (கில்) இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றினார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன் என்பதாலேயே அவருடைய ஜெர்சியை பெற்று இன்று அவருக்கு எதிராக விளையாடியுள்ளேன். அவரை உலகத்தரம் வாய்ந்த வீரர் என முதல் போட்டியிலிருந்தே நீங்கள் சொல்லலாம்”

“எடுத்துக்காட்டாக சிங்கிள் எடுக்கும் போது அவர் நினைக்கும் இடத்தில் பந்தை அடித்து எடுக்கிறார். அதுபோன்ற நுணுக்கம் நீண்ட காலம் பயிற்சி எடுத்தால் தான் உங்களுக்கு கிடைக்கும். அவரின் ஆட்டத்தை பார்த்து ஆச்சரியமடைந்த நான் அவருடைய ரசிகனானேன். அவரை ஐபிஎல் தொடரில் விளையாடிய போது டிவியிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வென்ற போது நேரிலும் பார்த்துள்ளேன். இன்று அவருக்கு எதிராக விளையாடியது சிறப்பானது”

“இந்த போட்டி முடிந்த பின் அவருக்கு என்னுடைய ஜெர்சியை கொடுத்தேன். பதிலுக்கு அவர் தன்னுடைய ஜெர்ஸியை கழற்றி கொடுத்தார். அதை நான் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே அவரிடம் கேட்டிருந்தேன். அவரும் எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார்” என்று கூறினார். இப்படி இளம் வயதிலேயே இந்த இரு வீரர்களும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து ஜெர்ஸியை மாற்றிக் கொண்டது ரசிகர்களை வியக்க வைக்கிறது.

Advertisement