இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் ஸ்மித், புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 338 ரன்கள் எடுத்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்கள் விளாசினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தனர். இதில் புஜாரா மற்றும் கில் ஆகியோர் அரை சதம் விளாசியதே அதிகபட்சமாக இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலிய அணி 94 ரன்கள் முன்னிலை வகித்தது. இதைத் தொடர்ந்து 3-வது நாளான நேற்று ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. லபுஸ்சேன் மற்றும் ஸ்மித் விக்கெட் இழக்காமல் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் பிரித்திவி ஷாவிற்கு பதிலாக இந்திய அணியில் அறிமுகமான இளம் வீரர் சுப்மன் கில்லை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 45, 35 என ரன்களை குவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் கில் அரை சதம் விளாசி இருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் ரோகித் சர்மாவுடனான பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்கள் குவித்திருக்கிறார்.
இளம் வீரர் கில் தனது சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு ஆட்டத்திலும் வெளிப்படுத்தி வருகிறார். இதனால் கில்லை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸி சுப்மன் கில்லை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
மைக்கேல் ஹஸி “சுப்மன் கில் எனக்கு மிகவும் பிடித்த வீரராக மாறி வருகிறார். இவரது ஆட்டம் பார்ப்பதற்கே அருமையாக இருக்கிறது. அவர் பிரண்ட் ஃபூட் மற்றும் பேக் ஃபூட் என இரண்டையும் சரியாக செய்து வருகிறார். அவர் விளையாடும் ஒவ்வொரு ஷாட்களும் தெளிவாக இருக்கிறது. இவர் ரோகித் சர்மாவுடன் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார். இவருக்கு இந்திய அணியில் சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” என்று கூறினார் மைக்கேல் ஹஸி.