இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் ஆலோசகராகவும் 3 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அதனால் ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீர் தமக்கு தேவையான துணைப் பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் சலுகையை பிசிசிஐ வழங்கியது. அதே சமயம் தங்களுடைய சார்பில் தமிழகத்தின் லக்ஷ்மிபதி பாலாஜி மற்றும் கர்நாடகாவின் வினய் குமார் ஆகியோரை பிசிசிஐ பவுலிங் பயிற்சியாளராக பரிந்துரைத்ததாக செய்திகள் வெளியானது. அதனால் பாலாஜி இந்திய அணியின் துணைப் பயிற்சிளராக வருவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களிடமும் ஏற்பட்டது.
தடுத்த கம்பீர்:
ஆனால் தற்போது இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மோர்னே மோர்கெல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் கொண்ட அவர் கம்பீர் தலைமையில் கொல்கத்தா ஐபிஎல் அணியில் விளையாடியுள்ளார். அதனால் தமக்கு மோர்கல் துணை பயிற்சியாளராக வேண்டுமென கம்பீர் நேரடியாக பரிந்துரைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அப்படி தலைமை பயிற்சியாளரான கம்பீர் நேரடியாக பரிந்துரைப்பதால் அதை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ பாலாஜி மற்றும் வினய் குமாரை தேர்ந்தெடுக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது. குறிப்பாக பாலாஜி போன்றவர்களை விட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற வெளிநாடுகளில் மோர்கல் அதிகமான அனுபவத்தை கொண்டுள்ளார். எனவே கம்பீரின் பரிந்துரையை உடனடியாக பிசிசிஐயும் ஏற்றுக்கொண்டதாக தெரிய வருகிறது.
இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “தலைமை பயிற்சியாளர் மட்டுமே பிசிசிஐ ஆலோசனை கமிட்டியின் நேர் காணலில் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் துணைப் பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் போது கௌதம் கம்பீரின் விருப்பத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்படும். மோர்னே மோர்கலுடன் சேர்ந்து கௌதம் கம்பீர் வேலை செய்துள்ளார்”
இதையும் படிங்க: ஆரம்பமாகும் நியூஸிலாந்து அணியின் வீழ்ச்சி.. டேவோன் கான்வே உட்பட 3 வீரர்களின் அறிவிப்பால் ரசிகர்கள் கவலை
“எனவே அவர் பயிற்சியாளராக வந்தால் நன்றாக இருக்கும் என்று கம்பீர் கருதினார். அத்துடன் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. எனவே அங்கே வெற்றிகரமாக செயல்பட்ட ஒரு தென்னாப்பிரிக்க வீரரை விட சிறந்த தேர்வு இருக்காது. அத்துடன் அடுத்த வருடம் இங்கிலாந்தில் 4 – 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற்றால் இங்கிலாந்தில் 6வது போட்டியும் இருக்கும்” என்று கூறினார்.



