தோல்விக்கு பின் விராட் கோலிக்கு ஹாங்காங் வீரர்கள் கொடுத்த நெஞ்சை பரிசு – பாராட்டும் இந்திய ரசிகர்கள்

VIrat Kohli IND vs HK
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்கடித்து ஹாங்காங் அணிக்கு எதிரான 2வது போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் ஹாங்காங் அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய 192/2 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்களும் கேஎல் ராகுல் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் 3வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய விராட் கோலி 59* (44) ரன்களும் அவரைவிட அட்டகாசமாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 68* (26) ரன்களும் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தனர். அதை துரத்திய ஹாங்காங் அணிக்கு நிஜாகத் கான் 10, முர்த்தசா 9 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் மிடில் ஆர்டரில் பாபர் ஹாயத் 41 (35) ரன்களும் கின்சிட் ஷா 30 (28) ரன்களும் எடுத்து போராடி ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அசத்தும் விராட்:
இறுதியில் ஐசாஸ் கான் 14 ரன்களும் ஜீசன் அலி 26* (17) ரன்களும் மெக்கன்னி 16* (8) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 152/5 ரன்களை மட்டுமே எடுத்த ஹாங்காங் போராடி தோல்வியடைந்தது. இதைவிட வலுவான பாகிஸ்தானை 147 ரன்களுக்கு சுருட்டிய உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை கொண்ட இந்திய அணியிடம் ஆல் அவுட்டாகி சரணடையாமல் போராடி தோல்வியடைந்த ஹாங்காங் நிறைய ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. முன்னதாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள விராட் கோலி அதற்கு பதிலடி கொடுப்பதற்காக வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்து இந்தத் தொடரில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விளையாடி வருகிறார்.

அதில் அழுத்தமான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ராகுல் டக் அவுட்டானதால் ஏற்பட்ட அழுத்தத்தை சமாளித்து ரோகித் சர்மாவுடன் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்ததால் மீண்டும் விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் அந்த 35 ரன்கள் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிலையில் இந்த போட்டியில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 59* (43) ரன்களை 134.09 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த அவர் விளையாடியதை விதத்தை பார்ப்பவர்களுக்கு ஓரளவு பழைய ஃபார்முக்கு திரும்பி விட்டதாகவே உணர வைத்தது.

- Advertisement -

ஹாங்காங் ஆதரவு:
இந்நிலையில் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள விராட் கோலிக்கு நேற்றைய போட்டி முடிந்ததும் ஹாங்காங் அணி வீரர்கள் அனைவரும் இணைந்து கையொப்பமிட்ட தங்களது நாட்டு ஜெர்சியை பரிசாக அளித்துள்ளனர். அந்த ஜெர்ஸியில் “விராட், நீங்கள் வருங்கால தலைமுறைக்கு உத்வேகமாக இருப்பதற்கு மிகவும் நன்றி. நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம், மேலும் உங்களுக்கு நிறைய அபாரமான நாட்கள் காத்திருக்கின்றன. உங்களுக்கு பலமாக, உங்கள் மீது அன்பாக, ஹாங்காங் அணி” என்று அந்நாட்டு வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுபோக ரோஹித் சர்மா, பாண்டியா, சூர்யகுமார் ஆகிய இந்திய வீரர்களுடன் ஆட்டோகிராப் மற்றும் புகைப்படங்களை எடுத்து கொண்ட ஹாங்காங் வீரர்கள் அவர்களது அனுபத்தையும் கேட்டறிந்தனர்.

இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனமுருகி பகிர்ந்துள்ள விராட் கோலி “நன்றி ஹாங்காங் கிரிக்கெட், இது மிகமிக இனிமையான உண்மையாக நெஞ்சைத் தொடும் செயலாகும்” என்று மனதார நன்றி தெரிவித்துள்ளார். என்னதான் எதிரணியாக இருந்தாலும் அன்றைய நாளில் தங்களுக்கு எதிராக 59 ரன்கள் குவித்து தோல்விக்கு முக்கிய பங்காற்றியிருந்தாலும் வெற்றி தோல்வி என்பதையும் தாண்டி தரமான வீரர் மற்றும் நல்ல மனிதர் என்பதை கருத்தில் கொண்டு விராட் கோலிக்கு இப்படி ஒரு அன்பு பரிசையும் ஆதரவையும் கொடுத்துள்ள ஹாங்காங் அணியை நிறைய இந்திய ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள்.

அத்துடன் இப்படி விராட் கோலியின் உண்மையான தரத்தை அறிந்து எதிரணியினர் கொடுக்கும் ஆதரவை இந்தியாவில் இருக்கும் நிறைய முன்னாள் வீரர்கள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் பாராட்டவில்லை என்றாலும் விமர்சிக்காமல் இருந்தாலே அவர் பழைய ஃபார்முக்கு வந்துவிடுவார் என சமூக வலைதளங்களில் பேசுகின்றனர். முன்னதாக ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா, மகிளா ஜெயவர்தனே, கெவின் பீட்டர்சன் உட்பட நிறைய வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement