ரசிகர்களை மகிழ்வித்த பஞ்சாப் – பெங்களூரு போட்டியில் 12 வருடங்களுக்கு பின் வித்யாசமான சாதனை – என்ன தெரியுமா?

RCB vs PBKS Extras
- Advertisement -

உலக அளவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரின் 2-வது நாளில் 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த 3-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள மயங்க் அகர்வால் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டு பிளேஸிஸ் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

- Advertisement -

பெங்களூரு 205 ரன்கள் சேர்ப்பு:
இதில் அனுஜ் ராவத் 21 ரன்களில் அவுட்டானாலும் தொடர்ந்து மறுபுறம் அபாரமாக பேட்டிங் செய்த டு ப்லஸ்ஸிஸ் அடுத்ததாக களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை வலுப்படுத்தினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே சிக்சர் மழை பொழிந்து ரன்களை விளாசிய அவர் 57 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் உட்பட 88 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது பங்கிற்கு வெறும் 14 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 32* ரன்கள் எடுத்து அபார பினிஷிங் கொடுத்தார். அவருடன் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருந்த விராட் கோலி 29 பந்துகளில் 41* ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்த பெங்களூரு 205 ரன்களை சேர்த்தது.

இதை அடுத்து 206 என்ற கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப் அணியும் ஆரம்பத்திலிருந்தே பெங்களூர் பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்து ரன்களை குவித்தது. குறிப்பாக அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 32 (24) ரன்களும் ஷிகர் தவான் 43 (29) ரன்களும் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய இலங்கை வீரர் ராஜபக்சே அதை சிறப்பாக பயன்படுத்தி வெறும் 22 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உட்பட 43 ரன்கள் விளாசினார்.

Odean Smith

இதனால் பஞ்சாப் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான வேளையில் அடுத்ததாக களமிறங்கிய முக்கிய வீரர் லிவிங்ஸ்டனை 19 ரன்களில் அவுட் செய்த பெங்களூரு இளம் வீரர் ராஜ் பாவாவை டக் அவுட் செய்து போட்டியை தனது பக்கம் திருப்பியது. அந்த பரபரப்பான நேரத்தில் கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் வெற்றி பெற 50 ரன்கள் தேவைப்பட்ட போது தமிழக வீரர் சாருக்கான் 24* (20) ரன்கள் எடுக்க அவருடன் களமிறங்கிய வெஸ்ட்இண்டீசின் ஓடென் ஸ்மித் வெறும் 8 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு யாருமே எதிர்பாராத வண்ணம் 25* ரன்கள் சேர்த்து பெங்களூருவை தோற்கடித்தார் என்றே கூறலாம்.

- Advertisement -

இதனால் 19 ஓவர்களிலேயே 208/5 ரன்கள் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது. மறுபுறம் டு பிளேஸிஸ் தலைமையில் முதன்முறையாக களமிறங்கிய பெங்களூரு பேட்டிங்கில் அசத்திய போதிலும் பந்து வீச்சில் சொதப்பியதன் காரணமாக பரிதாப தோல்வியடைந்து இந்த ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ளது. முன்னதாக நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடந்த இந்த போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து மழையாக இருந்தது என்றே கூற வேண்டும். ஏனெனில் இரு அணிகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களும் போட்டி போட்டுக்கொண்டு ரன் மழை பொழிந்தால் பந்துவீச்சாளர்களின் நிலைமை படாதபாடாக இருந்தது.

PBKS vs RCB2 Odean Smith Shahrukan

குறிப்பாக டு பிளேஸிஸ், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், மயங்க் அகர்வால், ஷிகர் தவான் என ரசிகர்கள் எதிர்பார்த்த அனைத்து ஸ்டார் வீரர்களும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்தனர். இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் மொத்தம் 24 சிக்ஸர்களை பறக்கவிட்டு 413 ரன்களை நொறுக்கி மைதானத்திற்கு வந்து ரசிகர்களையும் தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்களையும் ரன் மழையில் நனைத்தனர் என்றே கூறலாம்.

வித்யாசமான சாதனை:
இது மட்டுமல்லாமல் இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய பஞ்சாப் அணி பவுலர்கள் உதிரிகள் எனப்படும் 23 எக்ஸ்ட்ராஸ் ரன்களை பெங்களூர் அணிக்கு வாரி வழங்கினார். அதற்கு ஈடாக பெங்களூரு பவுலர்களும் 22 எக்ஸ்ட்ராஸ் ரன்களை வாரி வழங்கியதுடன் கையிலிருந்த நல்ல வெற்றியை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பரிசளித்தனர். மொத்தமாக இந்த போட்டியில் மொத்தம் 45 எக்ஸ்ட்ராஸ் ரன்கள் பதிவு செய்யப்பட்டது.

Virat Faf Du Plessis

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு போட்டியில் அதிக எக்ஸ்ட்ரா ரன்களை பதிவு செய்த போட்டியாக இந்த பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி வித்தியாசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2008-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக ஐபிஎல் தொடங்கப்பட்ட போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் வரலாற்றின் முதல் ஐபிஎல் போட்டியில் மோதின. ஆச்சரியப்படும் வண்ணமான அந்த முதல் போட்டியிலேயே 38 எக்ஸ்ட்ரா ரன்கள் பதிவு செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. அதன்பின் கடந்த 2010-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதிய ஒரு போட்டியிலும் அதேபோல் 38 உதிரி ரன்கள் பதிவு செய்யப்பட்டதால் அந்த சாதனையை சமன் செய்யப் பட்டது. ஆனால் தற்போது அதையெல்லாம் மிஞ்சி 45 ரன்கள் உதிரிகளாக வரலாற்றிலேயே முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

Advertisement