- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜான்டி ரோட்ஸை ஃபீல்டிங் பயிற்சியாளராக பரிந்துரைத்த கம்பீர்.. உடனே மறுத்த பிசிசிஐ.. காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். எனவே 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய கௌதம் கம்பீர் அடுத்த பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட உள்ளதால் தமக்கு தகுந்த துணைப் பயிற்சியாளர்களை தேர்வு செய்து கொள்ள அவருக்கு பிசிசிஐ அதிகாரத்தை வழங்கியுள்ளது. அதன் காரணமாக கொல்கத்தா அணியில் நீண்ட காலமாக துணைப் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங் போன்ற வீரர்கள் வளர்வதற்கு உதவிய அபிஷேக் நாயரை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க கௌதம் கம்பீர் பரிந்துரைத்துள்ளார்.

- Advertisement -

மறுத்த பிசிசிஐ:
மறுபுறம் அபிஷேக் நாயர் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் ஒன்றாக இணைந்து விளையாடியதால் நெருங்கிய நண்பராக இருக்கிறார். எனவே அவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐயும் சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. ஆனால் பவுலிங் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பரிந்துரைத்த வினய் குமாரை பிசிசிஐ ஏற்க மறுத்து விட்டது.

அதற்கு பதிலாக ஜாம்பவான் ஜாகீர் கான் அல்லது தமிழக வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோரை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விரும்புகிறது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர்கள் தலா 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை மற்றும் மும்பை அணியில் நீண்ட காலமாக பயிற்சியாளர்களாக செயல்பட்ட அனுபவத்தையும் கொண்டுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக தென்னாபிரிக்க ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸை நியமிக்க கௌதம் கம்பீர் பரிந்துரைத்துள்ளார். ஆனால் அதற்கு உடனடியாக பிசிசிஐ மறுப்பு தெரிவித்து விட்டதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இந்திய அணிக்கு இந்தியர்கள் மட்டுமே பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது.

இதையும் படிங்க: ஒருவேளை வெளியேறினால்.. இந்தியாவுக்கு பதில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடும் அணி எது? ஐசிசி விதிமுறை

அதனாலேயே அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட்டை தொடர்ந்து தற்போது கம்பீர் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஏற்கனவே ஃபீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் டி திலிப் சமீபத்திய வருடங்களில் நன்றாக செயல்பட்டுள்ளார். எனவே ஜான்டி ரோட்ஸ் மகத்தான ஜாம்பவான் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் இந்தியரை நியமிக்க விரும்புவதால் பிசிசிஐ தங்களின் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலிப்பை தொடர விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -