விரைவில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடர்களுக்கான 2 இந்திய அணியும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.
ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட்டார். எனவே மும்பை ஐபிஎல் அணியை போலவே ரோஹித்துக்கு பின் ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரைத் துணைக் கேப்டனாக கூட தேர்வு செய்யாத தேர்வுக்குழு சூரியகுமார் யாதவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.
பாண்டியாவுக்கு செக்:
குறிப்பாக ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தை சந்திப்பதால் இந்தியா விளையாடும் அனைத்து தொடர்களிலும் முழுமையாக விளையாடுவதில்லை. எனவே 2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக விளையாடக்கூடிய சூரியகுமார் புதிய கேப்டனாக வளர்க்க கௌதம் கம்பீர் முடிவெடுத்துள்ளார். அதன் காரணமாக இலங்கை டி20 தொடரில் சாதாரண வீரராக மட்டுமே பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரில் சாதாரண வீரராக கூட ஹர்டிக் பாண்டியா தேர்வு செய்யப்படவில்லை. கடைசியாக 2023 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர் காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதிலிருந்து குணமடைந்து 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அவர் இதுவரை உள்ளூரில் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
இந்நிலையில் அடுத்ததாக நடைபெறும் விஜய் ஹசாரே உள்ளூர் தொடரில் விளையாடினால் மட்டுமே பாண்டியாவுக்கு மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கம்பீர் தெரிவித்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டில் முழுமையாக 10 ஓவர்கள் வீசி தன்னுடைய ஃபிட்னஸை நிரூபித்த பின் வாய்ப்பு கொடுக்கலாம் என்று தேர்வுக் குழுவிடம் கம்பீர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நாட்டுப்பற்று இல்லாத அவரை விட ருதுராஜ், அபிஷேக் குறைஞ்சவங்களா? கம்பீர், அகர்கரை விளாசும் ரசிகர்கள்
இது பற்றி பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா முழுமையான 10 ஓவர்கள் வீசுவதை பார்க்க காத்திருப்பதாக தேர்வுக் குழு கூட்டத்தில் கௌதம் கம்பீர் நினைவூட்டினார். அதன் பின்பே வாய்ப்பு பற்றி பரிசீலனை செய்யப்படும்” என்று கூறினார். அதனால் இன்னும் சில மாதங்களில் துவங்கும் 2024 விஜய் ஹசாரே கோப்பையில் பாண்டியா பரோடா அணிக்காக விளையாடி 10 ஓவர்கள் வீச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



