
ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெத் ஸ்ட்ரீக் ஆகஸ்ட் 23ஆம் தேதி இயற்கை எழுதியதாக சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியானது மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் 1993இல் அறிமுகமாகி 2005 வரை மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக செயல்பட்ட அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 5000 ரன்களும் 450க்கும் மேற்பட்ட விக்கெட்களும் எடுத்த ஜாம்பவானாக போற்றப்படுகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000+ ரன்கள் 100+ விக்கெட்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் 2000+ ரன்கள் 200+ விக்கெட்டுகள் எடுத்த ஒரே ஜிம்பாப்வே வீரராக சரித்திரம் படைத்துள்ள அவர் ஓய்வுக்குப்பின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
இருப்பினும் சமீப காலங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் அதற்காக தென்னாப்பிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். எனவே அவர் விரைவில் குணமடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்யுமாறு உலக ரசிகர்களுக்கு ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டது ரசிகர்களை சோகமடைய வைத்தது. அந்த நிலைமையில் தம்முடைய நண்பர் ஹெத் ஸ்ட்ரீக் இயற்கை எய்தி விட்டதாக மற்றொரு நட்சத்திர ஜிம்பாப்வே வீரர் ஹென்றி ஒலாங்கா ட்விட்டரில் அறிவித்தது ரசிகர்களை சோகமடைய வைத்தது.
வேதனை பேட்டி:
90களில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளை தெறிக்க விட்ட ஜிம்பாப்வே அணியில் முக்கிய வீரராக செயல்பட்ட அவர் 49 வயதிலேயே இந்த உலகை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சோகமடைந்த ரசிகர்களும் வீரேந்திர சேவாக், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகளை வெளியிட்டனர். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் ஹீத் ஸ்ட்ரீக் நன்றாக இருப்பதாகவும் 3வது அம்பயர் அவரை மீண்டும் வரவழைத்து விட்டார் என்றும் வாட்ஸப் செயலியில் நிகழ்த்திய உரையாடல்களை ஆதாரத்துடன் ஹென்றி ஒலாங்கா ட்விட்டரில் பதிவிட்டார்.
அதை பார்த்த ரசிகர்களும் சேவாக் போன்ற நட்சத்திர வீரர்களும் மகிழ்ச்சியடைந்து தங்களுடைய இரங்கல் பதிவுகளை டெலீட் செய்து விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் உண்மையை அறியாமல் தவறான செய்திகளை வெளியிட்ட ஒலாங்கா மற்றும் ஊடகங்களை அனைவரும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பொய்யான செய்தி தம்மை வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கும் ஸ்ட்ரீக் வதந்தியான செய்திகளை பரப்பியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக ஏற்கனவே நோயிலிருந்து குணமடைந்து வரும் தமக்கு வாழ்த்துக்களை தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை இது போன்ற போலியான செய்திகளை பார்ப்பது வேதனையை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தற்போது நல்லபடியாக குணமடைந்து வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அது மொத்தமாக வதந்தி மற்றும் பொய்யான செய்தியாகும். இப்போதும் நான் உயிருடன் நன்றாக இருக்கிறேன்”
“வெளிப்புறத்தில் கடந்து செல்லும் ஒருவர் நம் நாள் மற்றும் வயதை சரி பார்க்கப்படாமல் இருக்கும் செய்திகளை பரப்புகின்றனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். எனவே ஆதாரமின்றி அந்த செய்தியை பரப்பியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில் இந்த செய்தியால் நான் மிகவும் மனமுடைந்துள்ளேன். அனைவரும் இது போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது நான் புற்றுநோயிலிருந்து குணமடைந்து ஓரளவு நன்றாக இருக்கிறேன்”
இதையும் படிங்க:2023 உ.கோ : ஆசிய கோப்பையில் சொதப்புனா ராகுலை கழற்றி விட்டு அவர செலக்ட் பண்ணுங்க – சாஸ்திரிக்கு பதிலடியுடன் கம்பீர் எதிர்ப்பு
“தற்சமயத்தில் வீட்டில் இருக்கும் நான் சிகிச்சைகளால் இன்னும் சற்று வலிகளை சந்தித்து வருகிறேன். இருப்பினும் ஓரளவு தற்போது நன்றாக இருக்கிறேன். ஆனால் திடீரென்று சமூக வலைதளங்களில் என்னை பற்றி இப்படி செய்திகள் வந்தது எனக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தியது. அது முற்றிலும் தவறானது. தற்போது குணமடைந்து வரும் நான் ஓரளவு நன்றாக உணர்கிறேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல யாருக்குமே உயிருடன் இருக்கும் போது உலகை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தியை கேட்பது மிகப்பெரிய வேதனையை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.