இப்போது புரிந்ததா! அவருக்கு அனுபவமே போதும், விமர்சனம் செய்யாதீங்க – தோனிக்கு கிடைத்த பெரிய ஆதரவு

MS Dhoni 2022 IPL
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 31-ஆம் தேதியன்று நடந்த 7-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ வரலாற்றில் தங்களது முதல் ஐபிஎல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 210/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். அதைத்தொடர்ந்து 211 என்ற கடினமான இலக்கை துரத்திய லக்னோ 19.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக குவின்டன் டி காக் 45 பந்துகளில் 61 ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லெவிஸ் 23 பந்துகளில் 55* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

CSK Lost to LSG

- Advertisement -

பார்முக்கு திரும்பிய தல தோனி:
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த சென்னை 18.2 ஓவரில் 189/5 என்ற நல்ல நிலையில் இருந்தபோது களமிறங்கிய அந்த அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி சந்தித்த முதல் பந்திலேயே மெகா சிக்சரை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க வைத்தார். அடுத்த பந்தில் மின்னல்வேக பவுண்டரியை தெறிக்கவிட்ட அவர் கடைசி ஓவரின் கடைசி பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரியை விளாசினார். வெறும் 6 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் அதிரடியாக 16* ரன்களை விளாசி சென்னைக்கு நல்ல பினிஷிங் கொடுத்தார்.

இது மட்டுமில்லாமல் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியிலும் 62/5 என்ற நிலையில் சென்னை திண்டாடிய போது களமிறங்கிய அவர் வெறும் 38 பந்துகளில் அரைசதம் அடித்து 50* ரன்கள் குவித்து சென்னை 131 ரன்களை குவிக்க முக்கிய பங்காற்றினார். ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் கடைசி நேரத்தில் களமிறங்கும் அவர் எதிரணி பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவித்து சென்னைக்காக எத்தனையோ வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக் கொடுத்தார்.

MS Dhoni 16

இதனால் பினிசெர் என கொண்டாடப்பட்டு வந்த அவர் கடந்த 2008 முதல் 2019 வரை ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது 300, 400 ரன்களை அடித்து வந்த நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ரன்கள் அடிக்க திண்டாடினார். அந்த தொடரில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் வெறும் 200 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் அவரின் சென்னை சூப்பர் கிங்ஸ் படுமோசமான அவமானத்தைச் சந்தித்தது.

- Advertisement -

நிரூபித்துள்ள தோனி:
அந்த வருடமே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற 2021 ஐபிஎல் தொடரில் அதைவிட மோசமாக செயல்பட்டு வெறும் 114 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனால் அவரை முடிந்து போன பினிசெர் என அவரைப் பிடிக்காத ரசிகர்கள் கேலியும் செய்து வந்தார்கள். அதன்பின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத காரணத்தாலும் 40 வயதைக் கடந்து விட்ட காரணத்தாலும் “எம்எஸ் தோனி என்பவர் முடிந்து போன கதை” என பலரும் அவருக்கு முத்திரை குத்தினார்கள். மேலும் ஓய்வு பெற்றாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் மட்டும் தான் விளையாடுவேன் என அடம் பிடிக்கும் வரை அவரின் பேட்டில் இருந்து கண்டிப்பாக ரன்கள் வரவே வராது என பல வல்லுநர்களும் தெரிவித்து வந்தனர்.

Dhoni

அப்படிப்பட்ட நிலையில் தற்போது 2 வருடங்கள் கழித்து அரை சதம் விளாசி பார்ம்க்கு திரும்பியுள்ள அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து “தோனி என்பவன் முடிந்து போனவன் அல்ல” என நிரூபணம் செய்துள்ளார். இந்நிலையில் தோனி மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

விமர்சனம் வேண்டாம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த வருடத்தில் எவ்வளவு கிரிக்கெட் அவர் விளையாடினார்? கடந்த 6 மாதங்களில் வெறும் 2 – 3 வாரங்கள் மட்டுமே விளையாடி இருப்பார். இருப்பினும் தற்போது அவர் தனது பலத்தை நம்பி விளையாடுகிறார். அவரிடம் ஏகப்பட்ட அனுபவமும் நுணுக்கங்களும் திறமையும் உள்ளது. அதை வைத்து இந்த வருடம் களமிறங்கிய முதல் போட்டியின் 10 நிமிடங்களிலேயே அவர் தனது பழைய பார்மை மீட்டெடுத்ததாக உணர முடிகிறது. அவர் தனது பிளேஸ்மெண்ட், புட் ஒர்க், டைமிங் மற்றும் பவர் ஆகிய அனைத்தையும் மீண்டும் பெற்று 2 வருடங்களுக்கு பின் முதன்முறையாக ஐபிஎல் அரை சதம் அடித்துள்ளார்” என பாராட்டினார்.

Shastri

அதாவது எம்எஸ் தோனியிடமுள்ள அனுபவத்திற்கும் திறமைக்கும் ரன்கள் அடிக்க வேண்டுமெனில் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனக்கூறிய ரவி சாஸ்திரி அதற்கு சான்றாக தற்போது அரைசதம் அடித்து தன்னை நிரூபித்துள்ள எம்எஸ் தோனியை இனிமேல் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கடைசியாக கடந்த வருடம் அக்டோபரில் துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில் 4-வது முறையாக கோப்பையை வென்ற எம்எஸ் தோனி அதன்பின் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டார்.

இதையும் படிங்க : அதுக்கு நீங்களே கேப்டன்ஷிப் செய்யலாம் – தோனியை விளாசும் முன்னாள் வீரர்கள், என்ன நடந்தது?

அதைத்தொடர்ந்து எந்தவிதமான முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்த அவர் இந்த வருடம் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் குஜராத் மாநிலம் சூரத் நகரில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அந்த 2 வாரம் பயிற்சியை மட்டும் பயன்படுத்திய அவர் மீண்டும் பழைய தோனியாக 40 வயதில் பார்ம்க்கு திரும்பியுள்ளது உண்மையாகவே அவரின் அனுபவத்தை காட்டுகிறது.

Advertisement