
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. அதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. அந்த வகையில் நடைபெற்ற இந்த தொடரின் மூன்று போட்டியிலும் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்துடன் நாடு திரும்ப காத்திருக்கிறது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி :
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 218 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி பல்வேறு விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியின் முதல் பத்து ஓவர்களில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி எங்களை அழுத்தத்தில் தள்ளிவிட்டனர். போட்டியின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த விக்கெட்டுகளை நாங்கள் இழந்ததால் மிகப்பெரிய அழுத்தம் எங்களுக்கு ஏற்பட்டது. பின்னர் நானும் அஸ்மத்துல்லா ஓமர்சாயும் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தோம்.
அந்த நேரத்தில் நாங்கள் நல்ல நிலையை நோக்கி நகர்ந்தோம். ஆனால் இறுதி நேரத்தில் மீண்டும் விக்கெட்டுகள் சரியவே எங்களால் பெரிய ஸ்கோரை நோக்கி செல்ல முடியவில்லை. எங்களது பார்ட்னர்ஷிப்பிற்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே எங்களால் நினைத்த அளவுக்கு ரன்களை எடுக்க முடியவில்லை.
நான் 95 போட்டிகளில் விளையாடி தற்போது தான் முதல் சதத்தை பதிவு செய்துள்ளேன். உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனிவரும் போட்டிகளிலும் அடுத்தடுத்து சதங்களை அடித்து எனது நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன். அதேபோன்று இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் விளையாடுவது என்பது சாதாரண விடயம் கிடையாது. இந்த தொடரில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் பல்வேறு நல்ல பாடங்களை இந்த தொடரில் கற்றுக் கொண்டோம்.
இதையும் படிங்க : சென்னை பிட்ச்ல இதை பண்றது சாதாரண விடயம் கிடையாது.. பவுலர்களை பாராட்டிய – சுப்மன் கில்
நாங்கள் ஒரு தரமான அணியாக இனி வரும் காலங்களில் ஒருநாள் போட்டிகளில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துவோம். இந்த தொடரில் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து அடுத்து வரும் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என்றும் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி கூறியது குறிப்பிடத்தக்கது.