
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது. இருப்பினும் கடைசிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. ஏனெனில் அப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பேட்டிங்கில் ரோஹித் சர்மா 121*, விராட் கோலி 74* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார்கள்.
அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் தங்களை கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழுவுக்கு அவர்கள் தக்க பதிலடியும் கொடுத்தனர் என்று சொல்லலாம். அதே போல கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் விளையாடிய ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதனால் தம்மை விமர்சித்தவர்களுக்கு ராணாவும் கொஞ்சம் பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.
முன்னதாக அப்போட்டியில் 198/5 என்ற நல்ல நிலையில் ஆஸ்திரேலியா விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ராணா வீசிய 37வது ஓவரின் 4வது பந்தில் மிட்சல் ஓவன் எட்ஜ் கொடுத்த எட்ஜ் முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச்சாக மாறியது. அந்த விக்கெட் அடுத்த 9 ஓவரில் ஆஸ்திரேலியா எஞ்சிய 4 விக்கெட்டுக்களையும் இழந்து 236க்கு ஆல் அவுட்டாக முக்கிய பங்காற்றியது.
இந்நிலையில் அந்த ஓவருக்கு முன் ஸ்லிப் வேண்டும் என்று நினைக்கவில்லை என ராணா தெரிவித்துள்ளார். ஆனால் அப்போதைய சூழ்நிலையைக் கணித்த ரோஹித் சர்மா தாமாக சென்று முதல் ஸ்லிப் பகுதியில் நிற்பதாக தம்மிடம் சொன்னதாக ராணா தெரிவித்துள்ளார். அடுத்த சில பந்துகளில் ரோஹித் சர்மா சொன்னது போல தமக்கு விக்கெட் விழுந்ததாக ராணா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மிட்சேல் ஓவன் விக்கட்டை ரோஹித் சர்மா தான் தமக்கு எடுத்துக் கொடுத்ததாகவும் ராணா கூறியுள்ளார். இது பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் என்னிடம் முதல் ஸ்லிப் வேண்டுமா என்று கேட்டார். அவரிடம் வேண்டாம் என்று நான் சொன்னேன். அப்போது கவர்ஸ் திசையில் இருந்த ரோஹித் சர்மா “ஹேய், ஸ்லிப் எடுத்துக்கொள். நான் அங்கே சென்று நிற்கிறேன்” என்று என்னிடம் சொன்னார்”
இதையும் படிங்க: யார் சொன்னாலும் அதுவரை ரோஹித் ரிட்டையராக மாட்டாரு.. இப்போவே ரெடியாக ஆரம்பிச்சுட்டாரு.. கோச் பேட்டி
“பின்னர் அவர் சொன்னது போலவே எனக்கு விக்கெட் கிடைத்தது. அதற்காக ரோஹித்துக்கு நன்றி தெரிவித்தேன். அந்தத் திட்டத்தை பற்றி விக்கெட் விழுந்த பின் ரோஹித் என்னிடம் தெரிவித்தார். எப்போதும் நான் என்னுடைய இதயத்திலிருந்து விளையாட விரும்புகிறேன். அதற்கு உங்களுடைய இதயத்தில் மட்டுமின்றி மூளையிலும் இருந்தும் விளையாடுங்கள் என்று பயிற்சியாளர்கள் என்னிடம் சொன்னார்கள்” எனக் கூறினார்.