இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 374 ரன்களை துரத்திய இங்கிலாந்து 4வது நாள் முடிவில் 336/6 ரன்கள் எடுத்தது. கடைசி நாளில் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் கண்டிப்பாக இங்கிலாந்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மனதில் தெம்பை விடாத இந்திய அணியினர் கடைசி நாளில் மேற்கொண்டு 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை சமன் செய்தது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பத்துக்கும் குறைவான ரன்களில் வெற்றி பெற்று இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது.
இந்தியா சிராஜ் வேற லெவல்:
இந்த வெற்றிக்கு பிரசித் கிருஷ்ணா 4 மற்றும் ஆட்டநாயகன் விருது வென்ற முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் எடுத்து பங்காற்றினார்கள். நேற்று சிராஜ் தவற விட்ட கேட்சை பயன்படுத்தி இந்தியாவை அடித்து நொறுக்கி 111 (98) ரன்கள் குவித்த ஹாரி ப்ரூக் கிட்டத்தட்ட இங்கிலாந்தை வெற்றி பெற வைத்தார். இருப்பினும் அவருடைய சிறந்த ஆட்டத்திற்கு தொடர்நாயகன் விருது பரிசாக கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் 5வது நாளில் பேட்டிங் செய்வதற்கு பிட்ச்சை கனமான உருளைக் கொண்டு ஃபிளாட்டாக மாற்றியும் தங்களை வீழ்த்திய இந்தியா வெற்றிக்கு தகுதியான அணி என்று ப்ரூக் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்று காலை நாங்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் வந்தோம். களத்தில் எங்களுக்கு 2 நல்ல வீரர்கள் இருந்ததால் எளிதாக வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம்”
ப்ரூக் பாராட்டு:
“இருப்பினும் இந்தியர்கள் திருப்பி போராடிய விதமும் சிராஜ் பவுலிங் செய்த விதமும் அற்புதமானது. சிராஜ் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர். இன்று பிட்ச்சை நாங்கள் கொஞ்சம் பிளாட்டாக மாற்றியதால் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் ஈரப்பதமான வானிலை நிலைமைகளை மாற்றியது. ஏற்கனவே சொன்னது போல் சிராஜ் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்”
இதையும் படிங்க: 5 ஆவது போட்டியில் நாங்கள் வெற்றிபெற காரணமே இதுதான்.. புகழ்ந்து தள்ளிய – கேப்டன் சுப்மன் கில்
“அந்த 5 போட்டிகளில் ஒவ்வொரு பந்தையும் 85+ மைல் வேகத்தில் வீசிய அவர் இத்தொடரில் அற்புதமாக செயல்பட்டார். அப்படி இந்தத் தொடரில் செய்த விஷயங்களுக்காக அவரை நான் மதிக்கிறேன். அதே போல ஒற்றை கையில் விளையாட வந்த கிறிஸ் ஓக்ஸ்க்கு பாராட்டுக்கள. நான் நேற்றே வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பேன். இருப்பினும் அது முடியாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது” என்று கூறினார்.



