3000 ரன்ஸ்.. புதிய உலக சாதனை படைத்த ஹாரி ப்ரூக்.. இங்கிலாந்து வெற்றிக்கு உதவிய தில்லுக்கு துட்டு பேட்டிங்

Harry Brook
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அதையும் சேர்த்து தொடர்ந்து 15வது வருடமாக இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையில் விளையாடி கோப்பையை வெல்வோம் என்று சவால் விட்ட இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்தது.

இருப்பினும் 4வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 3 – 1* (5) என்ற கணக்கில் ஒயிட்வாஸ் அவமானத் தோல்வியைத் தவிர்த்துள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் துவங்கிய அந்தப் போட்டி வெறும் 2 நாட்களுக்குள் முடிந்தது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசி ஆஸ்திரேலியாவை 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிது.

- Advertisement -

ஹாரி ப்ரூக் அதிரடி:

அதிகபட்சமாக மைக்கல் நீசர் 35, உஸ்மான் கவஜா 29 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்தை வெறும் 110 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காண்பித்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மைக்கல் நீசர் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அடுத்ததாக 42 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவை மிரட்டலாக பந்து வீசிய இங்கிலாந்து வெறும் 132 ரன்களுக்கு சுருட்டி திருப்பு முனையை உண்டாக்கியது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 46 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியாக 175 இலக்கைத் துரத்திய இங்கிலாந்தை அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 37, பென் டக்கெட் 34, ஜேக்கப் பெத்தல் 40 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

வேகமான 3000 ரன்ஸ் சாதனை:

அதன் வாயிலாக 15 வருடங்கள் 16 தொடர் தோல்விகளுக்கு பின் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு வெற்றியைப் பெற்று இங்கிலாந்து நிம்மதி பெருமூச்சு விட்டது. அந்த வெற்றிக்கு முதல் இன்னிங்ஸில் ஹாரி ப்ரூக் 2 பௌண்டரி 2 சிக்ஸருடன் அதிரடியாக 41 (34) ரன்கள் குவித்தது முக்கிய பங்காற்றியது. அதே போல் 2வது இன்னிங்ஸில் தில்லுக்கு துட்டு ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 3 பவுண்டரியுடன் 18* (22)ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றினார்.

இதையும் படிங்க: 16 தோல்வி.. ஒருவழியாக ஆஸியை சாய்த்த இங்கிலாந்து.. 15 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி

இப்போட்டியையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 3468 பந்துகளில் 3000 ரன்கள் கடந்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் வேகமாக 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ஹாரி ப்ரூக் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து): 3468
2. பென் டக்கெட் (இங்கிலாந்து): 3474
3. அடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா): 3610
4. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா): 4047
5. ரிஷப் பண்ட் (இந்தியா): 4095

Advertisement