
ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்ற சாதனை படைத்தது. சொந்த மண்ணில் நடைபெற்ற அத்தொடரில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் விளையாடிய இந்தியா லீக் சுற்றில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து தடுமாறியது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா செமி ஃபைனலில் 7 முறை உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஃபைனலுக்கு சென்றது.
குறிப்பாக ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன்களை திருப்பி அடித்த இந்தியா ஐசிசி உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் 300+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற உலக சாதனையை படைத்தது. அடுத்ததாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தம்மை அழைத்து சொன்ன சில ஆலோசனைகள் வெற்றிக்கு உதவியதாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தெரிவித்துள்ளார். அத்துடன் உலகக் கோப்பையை வென்றது கனவு போல இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இறுதிப்போட்டிக்கு முந்தைய இரவு சச்சின் சார் அழைத்தார்”
“அப்போது தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர் சமநிலையைக் கடைப்பிடிக்குமாறு எங்களை கேட்டுக்கொண்டார். போட்டி வேகமாக செல்லும் போது அதை கொஞ்சம் மெதுவாக்கி கட்டுப்படுத்த முயற்சிக்குமாறு சச்சின் சொன்னார். ஏனெனில் நீங்கள் அதிவேகமாக செல்லும் போது தடுமாற வாய்ப்புள்ளது. அதையே நாங்கள் தவிர்க்க வேண்டியிருந்தது”
“அப்படி சீனியர்கள் அனைவரும் சொன்ன ஆலோசனைகளை நான் சிந்தித்துப் பார்த்தேன். களத்தில் கட்டுப்பாட்டுடன் அமைதியுடன் இருக்க வேண்டும். அதை செய்தால் முக்கிய தருணங்களை உங்களால் பிடிக்க முடியும். நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் உலகக்கோப்பை வென்ற உணர்வை என்னால் இப்போது சிந்திக்க முடியவில்லை. ஒருவேளை சில மாதங்கள் கழித்து நாங்கள் என்ன சாதித்தோம் என்பதை நான் உணர்வேன்”
இதையும் படிங்க: ரசிகர்களின் கோரிக்கையுடன்.. எனக்காக ஜெய் ஷா ரூல்ஸை மாற்றி மெடல் தந்தாரு.. பிரதிகா மகிழ்ச்சி
“நாட்டுக்காக எதைக் கொடுத்தோம் என்பதை இப்போது என்னால் செயல்முறைப்படுத்த முடியவில்லை. ஒரு சாதாரண இருதரப்பு தொடரை வென்று விட்டு வீட்டுக்கு திரும்புவது போன்ற உணர்வு தோன்றுவதாக எங்களது பயிற்சியாளர் அன்மோலிடம் சொன்னேன். இப்போது உலகக்கோப்பை வென்றதை உணர முடியவில்லை. ஏனெனில் அது கனவு போல இருக்கிறது” என்று கூறினார்.