இந்திய கிரிக்கெட் அணி ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் எளிதாக வென்ற இந்தியா 3வது போட்டியிலும் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
டிசம்பர் 26ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை மகளிரணி 20 ஓவரில் 112/7 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கவிசா திலாரி 20, ஹாசினி பெரேரா 25, இமேஷா டுலானி 27 ரன்களை எடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரேணுகா சிங் 4, தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
இந்தியா ஹாட்ரிக் வெற்றி:
அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா 1, ஜெமிமா ரோட்டரிகஸ் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் மறுபுறம் இலங்கையை அடித்து நொறுக்கிய இளம் வீராங்கனை ஷபாலி வெர்மா 11 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79* (42) ரன்களை விளாசினார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஹெர்மன்பிரீத் 21* (18) ரன்கள் எடுத்த உதவியுடன் 13.2 ஓவரிலேயே 115/2 ரன்களை குவித்த இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.
அதனால் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற இந்தியா 3 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்று இலங்கையை தோற்கடித்தது. இதையும் சேர்த்து இலங்கைக்கு எதிராக இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் 16* வெற்றிகள் பெற்றுள்ளார். அதன் வாயிலாக சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
இரட்டை உலக சாதனை:
அந்தப் பட்டியல் பின்வருமாறு:
1. ஹர்மன்ப்ரீத் கௌர் (இந்தியா): 16, இலங்கைக்கு எதிராக (20 போட்டிகளில்)
2. சார்லட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து): 14, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (24 போட்டிகளில்)
2. ஹர்மன்ப்ரீத் கௌர் (இந்தியா): 14, வங்கதேசத்துக்கு எதிராக (17 போட்டிகளில்)
2. ஹீதர் நைட் (இங்கிலாந்து): 14, நியூஸிலாந்துக்கு எதிராக (15 போட்டிகள்)
இதையும் படிங்க:
அதை விட ஒட்டுமொத்த சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஹர்மன்பீரித் இந்தியாவின் கேப்டனாக 77வது வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற உலக சாதனையையும் ஹர்மன்ப்ரீத் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஹர்மன்ப்ரீத் கௌர் (இந்தியா): 77* (130 போட்டிகளில்)
2. மெக் லென்னிங் (ஆஸ்திரேலியா): 76 (100 போட்டிகளில்)
3.ஹீதர் நைட் (இங்கிலாந்து): 72 (96 போட்டிகளில்)



