
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்து அசத்தியது. அதனை தொடர்ந்து 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியால் 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததது.
அதன் காரணமாக குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் :
என்னுடைய எண்ணம் எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றார் போன்று செயல்படுவது மட்டும்தான். டி20 போட்டிகள் என்பது இரண்டு பந்துகளிலேயே மாறக்கூடிய ஒன்று. இரண்டு சிக்ஸர்கள் சென்றால் கூட உங்களது மனநிலை மாறிவிடும். ஆனால் நான் கேப்டன்சி செய்யும்போது எனக்கு உள்ளுணர்வு என்ன தோன்றுகிறதோ அதையே செய்து வருகிறேன்.
இன்றைய போட்டியிலும் ரஷீத் கான் மற்றும் நூர் அகமது ஆகியோரை கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் ஆகியோருக்கு எதிராக பயன்படுத்த நினைத்தேன். ஏனெனில் அவர்களைப் போன்ற பவர் ஹிட்டர்கள் வேகப்பந்து வீச்சாளர்களை எளிதாக விளையாடி விடுவார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களை அவர்கள் கணிப்பது கடினம்.
இதையும் படிங்க : வீடியோ : நேரடியாக புவனேஷ்வர் குமார் காலில் விழுந்த டேவிட் வார்னர், வியந்த இஷாந்த் சர்மா – காரணம் என்ன
எனவே வேகப்பந்து வீச்சாளர்களை மற்ற வீரர்களுக்கு எதிராகவும், சுழற்பந்து வீச்சாளர்களை அவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தினேன். அதன்படி நாங்கள் வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் சிம்பிளாக இருந்தாலும் அது இந்த மைதானத்தில் சிறப்பாக எடுபட்டது. நாங்கள் மும்பை அணியும் வீழ்த்தினோம் என ஹார்டிக் பாண்டியா பேசியது குறிப்பிடத்தக்கது.