
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கும் இந்த தொடருக்கு முன்னதாக இரண்டு விதமான இந்திய அணிகளையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹார்டிக் பாண்டியாவிற்கு கேப்டன் வாய்ப்பு தராமல் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முடிவுக்கு காரணம் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தலைமை ஏற்றுள்ள கௌதம் கம்பீர் தான் என்ற தகவலும் வெளியாகியது. ஏனெனில் இனிவரும் தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் முழு பிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்று கம்பீர் கடுமையான கட்டுப்பாட்டை கொண்டுவர உள்ளாராம்.
அதேபோன்று பாண்டியா விடயத்தில் அவரை விஜய் ஹசாரே தொடரில் பரோடா அணிக்காக விளையாடி 10 ஓவரும் பந்து வீசி தனது பவுலிங் பிட்னஸை நிரூபிக்க வேண்டும் என்றும் அப்படி நிரூபித்தால் தான் 2 வகையான இந்திய அணியிலும் இடம்பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளாராம்.
மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்றால் பந்துவீசும் அளவிற்கு முழு பிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாராம். இந்நிலையில் அடிக்கடி காயத்தால் அவதிப்படும் பாண்டியா ஏற்கனவே தனது பிட்னஸ் குறித்து தெரிவித்த கருத்து ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
அந்த வகையில் அவர் கூறியதாவது : 2017-ஆம் ஆண்டு நான் பவுலிங் செய்யும்போது எனது பந்துவீச்சு 130 கிலோமீட்டர் வேகத்தில் தான் இருக்கும். ஆனால் தற்போது அந்த வேகத்தை அதிகரிக்க வேண்டும் என எனது உடலை சரியாக பராமரித்து வருகிறேன். எனது உடல் தகுதியை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போன்று பயிற்சியும் செய்து வருகிறேன். உடல் ரீதியாக நான் சந்தித்த பின்னடைவுகளை சரி செய்து தற்போது பலமாகவே உள்ளேன்.
இதையும் படிங்க : திடீர்னு யூடர்ன் போட்டு அநியாயம் பண்ணிட்டீங்க.. உடைஞ்சு போய்ருப்பாரு.. அகர்கர் மீது சஞ்சய் பங்கர் காட்டம்
பிட்னஸ் உடன் இருக்க வேண்டும் எனில் கடின உழைப்பையும், பயிற்சியையும் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். தற்போது நான் 16 வயது வீரர் போலவே உணர்கிறேன் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது என ஹார்டிக் பாண்டியா பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.