அன்று காயத்தால் சாய்ந்த அதே மைதானத்தில் இன்று வாழ்நாளின் சிறந்த கம்பேக் கொடுத்த பாண்டியா – தரவரிசையில் புதிய சாதனை

Hardik Padnday IND vs PAk
- Advertisement -

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா வெல்வதற்கு நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா ஆல்-ரவுண்டராக முக்கிய பங்காற்றினார். துபாயில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானை சிறப்பாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து 147 ரன்களில் சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் சேசிங் செய்யும் போது கடைசி நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பான அழுத்தத்திற்கு அஞ்சாமல் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 33* (17) ரன்களை விளாசி அதிரடியாக பினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார். அதனால் இதே மைதானத்தில் கடந்த வருடம் உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தானுக்கு அவர் தக்க பதிலடி கொடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

ஆனால் கடந்த வருடம் இதே மைதானத்தில் அவர் ஒரு ஓவர் கூட பந்து வீசாமல் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டது வரலாற்று தோல்வியை இந்தியா சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது. அதனாலேயே இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர் அதற்காக மனம் தளராமல் ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் அணிக்கு 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளையும் எடுத்து மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழிநடத்தி யாருமே எதிர்பாராத வகையில் முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தையும் வென்று காட்டினார்.

- Advertisement -

வீழ்ச்சியும் எழுச்சியும்:
அதனால் அதிரடியாக நீக்கிய அதே தேர்வுக்குழு மீண்டும் தாமாக முன்வந்து தேர்வு செய்த நிலையில் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய தொடர்களில் இதேபோல் மிகச் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய அவர் அதே பழைய ஃபார்முக்கு பழைய பாண்டியாவாக திரும்பியுள்ளார். அவரது வருகையால் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் வலுவடைந்துள்ள இந்தியா சமநிலையைப் பெற்று வலுவான அணியாக மாறியுள்ளது.

முன்னதாக கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கையை கொடுத்த ஹர்திக் பாண்டியா கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இதே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடுமையான காயத்தை சந்தித்தார். அதனால் எழுந்து நடக்க முடியாத அளவுக்கு கடுமையான வலியை சந்தித்த அவரை வேறுவழியின்றி சக்கர தள்ளுவண்டி வாயிலாக மைதானத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

- Advertisement -

அதிலிருந்து குணமடைந்து 2019 உலகக்கோப்பையில் விளையாடினாலும் அதன்பின் சந்தித்த காயம் அந்த பழைய காயத்தையும் கிளறி விட்டது போல் அவரது செயல்பாட்டில் மிகப்பெரிய தடையை ஏற்படுத்தி இந்திய அணியிலிருந்து விலகும் அளவுக்கு பின்னடைவை கொடுத்தது. அதனாலேயே தம்மை வளர்த்த மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்தும் வெளியேறும் நிலைமையை சந்தித்த அவர் மனம் தளராமல் போராடி மீண்டும் அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார்.

தரவரிசையில் முன்னேற்றம்:
இதை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர் வாழ்நாளில் பின்னடைவை சந்தித்ததை விட இந்த கம்பேக் தான் மிகவும் பெரியது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அப்பட் ஒரு கட்டத்தில் வீழ்ந்த அதே மைதானத்தில் அபாரமாக செயல்பட்டு எழுச்சி கண்டுள்ள ஹர்திக் பாண்டியா உண்மையாகவே பாராட்டுக்குரியவர். இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்து தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு முக்கிய பங்காற்றினயதால் சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.

தற்சமயத்தில் டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய வீரராக சாதனை படைத்துள்ள அவர் கேரியரில் முதல் முறையாக 5வது இடத்தை பிடித்து இந்தியாவுக்கு மற்றுமொரு பெருமை சேர்க்கிறார். மேலும் பேட்டிங் வரிசையில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே இந்திய வீரராக திகழும் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் புவனேஸ்வர் குமார் மட்டும் டாப் 10 பட்டியலில் 8வது இடத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறார். மேலும் டி20 அணிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இந்தியா ஜொலித்து வருகிறது.

Advertisement