இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் முன்னிலையில் இருந்தது, இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் காயம் காரணமாக விளையாடாததால் மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக விளையாடினார். நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரரான மேத்யூ வேட் 58 ரன்களும், ஸ்மித் 46 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 20 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தவிர மற்ற அனைவரும் ரன்களை சற்று அதிகமாக வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் தவான் 52 ரன்களையும் இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா 22 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். மேலும் ஆட்டமிழக்காமல் அணியை கடைசி ஓவரில் இரண்டு பெரிய சிக்சர்களை அடித்து பாண்டியா வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.இதன் மூலம் இந்திய அணி டி20 தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆட்டநாயகன் ஹர்டிக் பண்டியா கூறுகையில் : ஸ்கோர் போர்டில் ரன்கள் அதிகமாக இருக்கும்போது எந்த பவுலர் மீது டார்கெட் செய்து விளையாட வேண்டும் என்பதை நன்கு புரிந்து விளையாடுகிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளில் பலமுறை விளையாடி உள்ளதால் என்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டு வருகிறேன். என்னுடைய கேம் தற்போது சிறப்பாக இருக்கிறது. மேலும் நம்பிக்கையுடன் விளையாடி வருகிறேன். இதுபோன்ற பெரிய இலக்குகளை எட்டும் போது நான் உதவுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப்போட்டியில் நடராஜன் சிறப்பாக விளையாடினார். அவரை குறிப்பிட்டே ஆகவேண்டும் இந்த போட்டியின் ஆட்ட நாயகன் நிச்சயம் அவராக தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் மற்ற பந்துவீச்சாளர்கள் கஷ்டப்படும் போது இந்த போட்டியில் நடராஜன் சிறப்பாக பந்துவீசினார் என்று பாண்டியா தனது பேச்சால் நெகிழ வைத்தது குறிப்பிடத்தக்கது.