விராட் கோலியை தொடர்ந்து ஹார்டிக் பாண்டியாவும் ஒருநாள் தொடரில் இருந்து விலகல் – காரணம் என்ன?

Hardik Pandya
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரானது ஜூன் 13-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.

ஒருநாள் தொடரில் இருந்து விலகிய ஹார்டிக் பாண்டியா :

இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டபோது சுப்மன் கில் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வேளையில் விராட் கோலி 2026 ஐ.பி.எல் தொடரின் போது இறுதிப்போட்டியில் அடைந்த காயம் காரணமாக இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை தவறவிடுகிறார் என ஏற்கனவே பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

- Advertisement -

மேலும் அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மாற்றுவீரராக அணியில் இணைகிறார் என்றும் தெரிவித்திருந்தது. இவ்வேளையில் மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவும் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஜூன் 2-ஆம் தேதி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபித்த ஹார்டிக் பாண்டியா ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்று கூறப்பட்டது. இவ்வேளையில் இன்று வெளியான அறிவிப்பின் படி ஹார்டிக் பாண்டியாவின் முதுகு பகுதியில் காயம் சரியானாலும் தற்போது தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு மூத்த அண்ணன் மாதிரி விராட் கோலி எனக்கு அந்த அட்வைஸ்களை வழங்கினார் – வைபவ் சூர்யவன்ஷி பூரிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறயிருக்கும் 50 ஓவர் உலக் கோப்பை தொடரில் முக்கிய வீரராக இடம் பிடிக்கப்போகும் ஹார்டிக் பாண்டியா சரியான உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதாலேயே அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் என்றும் தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கான சிகிச்சையையும் அவர் மேற்கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement