மும்பையை ரிவர்ஸ் கியரில் 2008க்கு அழைத்து சென்ற பாண்டியா.. 16 வருடங்கள் கழித்து பரிதாப சாதனை

Hardik Pandya MI
- Advertisement -

ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியுள்ளது. குறிப்பாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழும் ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு பாண்டியாவை கேப்டனாக அறிவித்தது.

அந்த நிலையில் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே மும்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து ஹைதராபாத்துக்கு எதிராக நடந்த 2வது போட்டியிலும் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை பரிதாபமாக தோற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் ஹென்றிச் க்ளாஸென் 80*, டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் சர்மா 63 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 277/3 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ரிவர்ஸ் கியரில்:
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் ஹைதராபாத் சாதனை படைத்தது. ஆனால் அதை சேசிங் செய்த மும்பை முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 246/5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக டிம் டேவிட் 42*, திலக் வர்மா 64 ரன்கள் எடுத்தும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியதால் மும்பையால் வெற்றியை தொட முடியவில்லை.

அந்த வகையில் மும்பையின் கேப்டனாக ஹர்டிக் பாண்டியா இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 2 தோல்விகளை பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக 16 வருடங்கள் கழித்து தன்னுடைய முதல் ஐபிஎல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த 2 தோல்விகளை பதிவு செய்த மும்பை கேப்டன் என்ற பரிதாப சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். இதற்கு முன் கடைசியாக கடந்த 2008 ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங் இதே போல மும்பை அணியின் கேப்டனாக தன்னுடைய முதல் 2 போட்டியிலும் தோல்வியை பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

இது போக ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் முறையாக ஒரு ஐபிஎல் போட்டியில் 250க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கி மும்பை மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, பொல்லார்ட் ஆகியோரது தலைமையில் கூட மும்பை இப்படி 250 ரன்களை எதிரணிக்கு வாரி வழங்கியதில்லை.

அந்தளவுக்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருப்பது மும்பை அணிக்கு மோசமான சாதனைகளையும் தோல்விகளையும் கொடுத்துள்ளது. மொத்தத்தில் ரோகித்தை விட சிறப்பாக அணியை முன்னோக்கி வழி நடத்திச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் ஹர்திக் பாண்டியாவை மும்பை நிர்வாகம் கேப்டனாக நியமித்தது. ஆனால் அவரது தலைமையிலோ ரிவர்ஸ் கியர் போட்டு மும்பை பின்னோக்கி செல்வது ரசிகர்களுக்கு கவலையை கொடுக்கிறது.

Advertisement