இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 127 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கபில் தேவிற்கு அடுத்து மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் ஹார்டிக் பாண்டியா இந்திய அணிக்காக தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
10 ஆண்டுகளை பூர்த்தி செய்த ஹார்டிக் பாண்டியா :
காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து வரும் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முக்கிய வீரராக நீக்க முடியாத இடத்தை பிடித்து விளையாடி வருகிறார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தும் ஹார்டிக் பாண்டியா இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரிலும் இவரது செயல்பாடு திருப்திகரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை உருக்கமான ஒரு பதிவாக அவர் தனது சமூகவலை பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : இந்த பயணத்தில் பத்து ஆண்டுகள் நிறைவு அடைந்திருக்கிறது. தற்போது எனக்கு 33 வயதாகிறது. நான் நேசிக்கும் விளையாட்டை விளையாடுவதும் அதன் மூலம் நாட்டிற்கு சேவை செய்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு மிகவும் நன்றி. நான் இந்த இடத்திற்கு வர நிறைய சோதனைகளையும், கஷ்டங்களையும் கடந்து வந்துள்ளேன். இறைவனுக்கு மிகவும் நன்றி. இந்த 10 ஆண்டுகள் நிறைவடைந்தது பற்றி நான் யோசிக்கவில்லை. இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்பதை நான் நம்புகிறேன்.
இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடிக்க உன்னால் முடியும் தம்பி.. இளம் வீரரை பாராட்டிய – ரவிச்சந்திரன் அஷ்வின்
உண்மையாகவே நான் பயணிக்க விரும்பும் பாதையில் இப்போதுதான் அடி எடுத்து வைத்துள்ளேன் என்று நெகிழ்ச்சியான கருத்துக்களை பாண்டியா பதிவிட்டுள்ளார். அதோடு ஜனவரி 26-ஆம் தேதி என்னை அறிமுகப்படுத்திய கடவுளுக்கு ஒரு பெரிய திட்டம் இருந்திருக்கிறது. இந்த விளையாட்டை விளையாடும் போது நான் தற்போது ஒரு மனிதனாக வளர்ந்து விட்டேன் என மனநிறையுடன் முடித்துள்ளார்.



