
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தரம்சாலா நகரில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் சமநிலை வகிக்கின்றன.
இதன் காரணமாக இந்த மூன்றாவது போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வேளையில் இந்த மூன்றாவது போட்டியின் போது முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே குவித்தது.
தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக எய்டன் மார்க்கெட் 61 ரன்களை குவித்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக பந்துவீசிய நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா மூன்று ஓவர்கள் வீசி 23 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
அப்படி அவர் எடுத்த இந்த ஒரு விக்கெட் மூலம் முதல் இந்திய வீரராகவும், நான்காவது சர்வதேச வீரராகவும் மாபெரும் சாதனை ஒன்றினை டி20 போட்டிகளில் பாண்டியா நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இன்றைய போட்டியில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டை வீழ்த்திய அவர் சர்வதேச டி20 போட்டிகளில் 100-வது விக்கெட்டை பதிவு செய்தார்.
இதன் மூலம் இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது வீரராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ஆனால் ஏற்கனவே அவர் சர்வதேச டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் பேட்டிங்கில் அடித்துள்ளதால் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : போன மேட்ச்ல நல்லா ஆடல.. அதனால் காய்ச்சல் காரணமாக வெளியேறிய இந்திய வீரர் – விவரம் இதோ
இந்த சாதனையை உலக அளவில் ஷாகிப் அல் ஹசன், சிக்கந்தர் ராசா மற்றும் முகமது நபி ஆகியோர் மட்டுமே செய்துள்ள வேளையில் நான்காவது சர்வதேச வீரராக ஹார்டிக் பாண்டியா இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.